தென்னக மொழி திரைப்பாடல்களை
பொறுத்த வரை 1980 வரை பி.சுசீலா தான் முதன் இடத்தில் இருந்தார் என்பது எல்லோருக்கும்
தெரியும். 80-களில் பி.சுசீலாவின் நிலை எப்படி இருந்தது என ஒரு பார்வை (1980-1989).
பி.சுசீலாவுக்கு
போட்டியாக யாரும் இல்லாத நிலையில் 70-களின் மத்தியில் வாணி ஜெயராம் அறிமுகம்
ஆனார். அதுவும் பி.சுசீலாவின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கும் எம்.எஸ்.வி அவரை அறிமுகப்படுத்திய போது முதல் போட்டிப்பாடகி உருவாகினார். அபூர்வ ராகங்களில் அவர்
வாங்கிய தேசீய விருது இன்னும் ஒரு படி அவரை உயர்த்தியது. அதனால் எம்.எஸ்.வி
மற்றும் சங்கர் கணேஷ் இசை அமைத்த பல படங்களில் அவர் குரலும் சுசீலாவுக்கு இணையாக ஒலித்தது.
அதுவரை அவ்வப்போது பாடிக்கொண்டிருந்த எஸ்.ஜானகிக்கும் அன்னக்கிளி படத்துக்கு பின்
வாய்ப்புகள் கூட ஆரம்பித்தது. 70-களின் இறுதியில் பி.சுசீலா, வாணி ஜெயராம், எஸ்.ஜானகி, எல்.ஆர்.ஈஸ்வரி
தவிர புதிதாய் அறிமுகம் ஆன சசிரேகா, ஜென்சி, உமா ரமணன், எஸ்.பி.சைலஜா என நிறைய
பாடகிகள் வெற்றிகரமாக பாடிக்கொண்டு இருந்தார்கள்.
இதில் ஆரோக்யமான விஷயம்
என்னவென்றால் யாரும் யாராலும் பாதிக்கப்படவில்லை. எல்லோருக்கும் வாய்ப்புகள்
இருந்தது. காரணம் அதிகமான படங்கள் தயாரிக்கப்பட்டது தான். நான்கு
தென்னக மொழிகளிலும் எல்லோரும் பாடிக்கொண்டிருந்தார்கள். தவிர வேற்று மொழி டப்பிங்
படங்களையும் மக்கள் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்து விட்டிருந்தார்கள். அதனால்
பாடகர்களுக்கு மட்டும் வாய்ப்பு குறையவே இல்லை.
80-களின்
ஆரம்பத்திலும் இதுவே தொடர்ந்தது. 80-களில், ஒரு சில வருடங்கள், படங்களின் எண்ணிக்கை 150-ஐ தாண்டியது. தவிர மொழி மாற்று படங்களும் ஓட ஆரம்பித்தன. அதனால் பாடகர்களுக்கும்
இசை அமைப்பாளர்களுக்கும் வாய்ப்புகள் நிறைய இருந்தது. ராமநாராயணன் போன்றோர் 15
நாட்கள் ஓடினால் போதும் என்ற நிலையில் நிறைய சின்ன பட்ஜெட்
படங்களையும் எடுத்து ஓட விட்டார்கள்.
கன்னட படங்களில் வாணியும், எஸ்.ஜானகியும் அதிகமாக பாடினார்கள்.
குறிப்பிடப்பட வேண்டிய விஷயம், கன்னட படவுலகில் டப்பிங் படங்களுக்கு அனுமதி
கிடையாது. படங்களின் எண்ணிக்கையும் மற்ற மொழிகளை விட குறைவு தான். மலையாள படங்களில் கூட 80-களின் ஆரம்பத்தில்
வாணியும், ஜானகியும் முன்னிலை வகித்தார்கள். 80-களில்
மத்தியில் இருந்து சித்ரா மலையாளத்திரை உலகை முழுவதும் ஆக்கிரமித்து விட்டார்.
தமிழில் இளையாராஜாவின் இசையில்
ஜானகியும், சங்கர் கணேஷ் மற்றும் எம்.எஸ்.வி இசையில் வாணி ஜெயராமும் அதிகமாக
பாடினார்கள். ஜானகிக்கு அதிக அளவில் ஹிட்ஸ் கிடைத்து முன்னணியில் இருந்தார்.
ஆனாலும்,. பி.சுசீலாவுக்கென ஒரு இடம் எல்லோர் இசையிலும் இருந்து கொண்டே இருந்தது. என்னிடம்
இருந்த பி.சுசீலா லிஸ்ட்டில் தேடிய போது கிட்டத்தட்ட 783 திரை பாடல்கள்
தமிழில் கிடைத்தது. (1980 -116, 1981 – 85, 1982-89 -1983-69, 1984-108,
1985 - 90, 1986 - 74, 1987- 62, 1988 -55, 1989 -35 , மொத்தம் 783.
) விட்டுப்போன படங்கள், டப்பிங் படங்கள் மற்றும் பக்தி பாடல்களையும்
சேர்த்தால் அது ஆயிரத்தை தொடலாம். சராசரியாக 80-100 பாடல்கள்
பாடி இருக்கிறார். அதிகம் பாடாதது போல் தோன்றினாலும், ஓரளவு பாடிக்கொண்டே தான் இருந்திருக்கிறார்.
கே.பாலச்சந்தர், எஸ்.ஏ.சி, முக்தா, தேவர் படங்கள், சத்யா மூவிஸ், ஏ.வி.எம்,
வி.எஸ்.நரசிம்மன் இசை அமைத்த படங்கள் என ஓரளவு வாய்ப்புகள் இருந்து கொண்டே
இருந்தன. இளையராஜாவின் இசையில் கூட மொத்தமாக 325 பாடல்களுக்கு
மேல் (தமிழ் 192. மற்றவை தெலுங்கில்- Proof ) பாடி இருக்கிறார். அதில் பெரும்பாலும் 80-களில்
தான் வெளிவந்தன. 80-க்கு பிறகு நிறைய பக்திப்படங்கள் வந்தன. கே.ஆர்.விஜயா, சுஜாதா
நடிக்கும் படங்களில் பெரும்பாலும் பி.சுசீலாவே பாடினார். இத்தனை
பாடல்கள் பாட அதுவும் ஒரு காரணம். சித்ராவின் வெற்றிக்கு பின் எல்லாரின்
வாய்ப்புகளும் குறைய ஆரம்பித்தது.
ஆனால், தெலுங்கில் முழுக்க முழுக்க பி.சுசீலாவின் ஆதிக்கமே
தொடர்ந்தது. அங்கே லதாவும் சுசீலா தான், ஆஷாவும் சுசீலா தான். ஸ்ரீதேவிக்கும்
பாடுவார், ஜெயமாலினிக்கு பாடுவார். அவ்வப்போது தான் மற்றவர்களுக்கு வாய்ப்பு
கிடைக்கும். என்னிடம் இருக்கும் ஆதாரங்களை மட்டும் வைத்து பார்த்த
போது, 80-களில் தெலுங்கில் மட்டும் அவர் பாடிய பாடல்கள் 3000-தை
தாண்டி இருந்தது. 1980 – 476. 1981 - 275,
1982 - 318, 1983 - 350, 1984 – 359, 1985 – 275, 1986 – 363, 1987 – 311, 1988 –
288, 1989 - 139. மொத்தம் : 3146. விட்டுப்போன படங்கள், டப்பிங்
படங்கள், பக்திப்பாடல்கள் சேர்த்தால், எண்ணிக்கையில் இன்னும் 500 பாடல்களாவது
கூடும். தமிழில் ராஜாக்களும், மன்னர்களும் வாய்ப்புகளை குறைத்த போது, தெலுங்கில் சக்ரவர்த்திகளே
வந்து வாய்ப்புகளை அள்ளி வீசினார். தெலுங்கு பட உலகில் 80-களில் கொடி
கட்டி பறந்த சக்ரவர்த்தி இசையில் மட்டும் 2000-க்கு
மேல் பாடல்களை பாடி இருக்கிறார் சுசீலா. ( சக்ரவர்த்தி அவர்கள் 70’s. 80’s,
90’s கொடுத்த மொத்த வாய்ப்புகள். சக்ரவர்த்தி கூட 800 படங்களுக்கு
மேல் இசை அமைத்ததாக சொல்ல கேட்டிருக்கிறேன்). தவிர கே.வி.மகாதேவன், சத்யம்,
ஜே.வி.ராகவுலு, ரமேஷ் நாயுடு, ராஜன் நாகேந்திரா என எல்லோர் இசையிலும் பாடிக்கொண்டே
இருந்தார். 80’களில் கூட இரண்டு தேசீய விருதுகளையும் (1982 ,1983), ஐந்து முறை
ஆந்திர மாநில விருதுகளையும்(1981, 1982, 1984, 1987, 1989) பெற்றிருக்கிறார்.
யார் கெடுக்க நினைத்தாலும், திறமை இருப்பவர்களுக்கு தோள் கொடுக்க கடவுள் யாரையாவது
அனுப்புவார். அது திருமதி.சுசீலா அவர்கள் விஷயத்திலும் நடந்தது. தெலுங்கு பட உலகம்
ஆந்திராவுக்கு இடம் பெயரும் வரை அவரை முதல் நிலையிலேயே வைத்து அழகு பார்த்தது. ஆந்திர
பட உலகில், எண்பதுகளில் நடந்த விந்தை என்னவன்றால், கிளாசிகல் சார்ந்த பாடல்களும்,
மசாலா பாடல்களும் ஒரே நேரத்தில் ஹிட் ஆனது தான்.. சுசீலா அவர்களும் காலத்துக்கு
ஏற்றாற்போல் எல்லா வகை பாடல்களையும் பாடி வந்தார். செமி
கிளாசிகல் வகையான மேகசந்தேசமும், மசாலா படமான தேவதாவும் ஒரே வருடத்தில் தான் ஹிட்
ஆகின. இரண்டு படங்களிலுமே பெண் குரல் பி.சுசீலாவுடையது தான்.
80-களின் நாயகியான ஜெயப்ரதாவுக்கு நேரடி மற்றும் டப்பிங் படங்களில் 500 பாடல்களுக்கு மேல் குரல் கொடுத்திருக்கிறார். ஜெயசுதாவுக்கு 450 பாடல்களுக்கு மேலும், ஸ்ரீதேவிக்கு நானூறு பாடல்களுக்கு மேலும், ராதாவுக்கு முன்னூறு பாடல்களுக்கு அதிகமாகவும், ராதிகாவுக்கு கிட்டத்தட்ட 200 பாடல்களும் குரல் கொடுத்து இருக்கிறார். தெலுங்கில் அதிக அளவு டுயட்ஸ் இருந்ததும் இதற்கு ஒரு முக்கிய காரணம்.
80-களின் நாயகியான ஜெயப்ரதாவுக்கு நேரடி மற்றும் டப்பிங் படங்களில் 500 பாடல்களுக்கு மேல் குரல் கொடுத்திருக்கிறார். ஜெயசுதாவுக்கு 450 பாடல்களுக்கு மேலும், ஸ்ரீதேவிக்கு நானூறு பாடல்களுக்கு மேலும், ராதாவுக்கு முன்னூறு பாடல்களுக்கு அதிகமாகவும், ராதிகாவுக்கு கிட்டத்தட்ட 200 பாடல்களும் குரல் கொடுத்து இருக்கிறார். தெலுங்கில் அதிக அளவு டுயட்ஸ் இருந்ததும் இதற்கு ஒரு முக்கிய காரணம்.
இசை அமைப்பாளர்களை பொறுத்த
வரை சக்ரவர்த்தி பெரும்பாலான படங்களில் அவரையே பாட வைத்தார். கே.வி.மகாதேவன்
சங்கராபரணத்துக்கு இசை அமைத்த போது பி.சுசீலாவையே ஒப்பந்தம் செய்து இருந்ததாகவும்,
ஆனால் தெரியாத சில காரணங்களால் வேறு பாடகி பாடும் படி ஆனது என்றும் கேள்விப்பட்டு
இருக்கிறேன். அதனால் தான் என்னவோ, அப்புறம் வந்த தியாகய்யா முதல் எல்லா
படங்களிலும் சுசீலாவையே பாட வைத்தார். தமிழிலும், தெலுங்கிலும், மற்ற மொழிகளிலும்
சேர்த்து கே.வி.எம் இசையிலும் பி.சுசீலா கிட்டத்தட்ட 2000 பாடல்கள்
பாடி இருக்கிறார். சத்யம் இசையில் 800 பாடல்களுக்கு மேல் (தெலுங்கு, கன்னடா,
தமிழ் ஆகிய மொழிகளில்) பாடி இருக்கிறார்.
80-களில் சுசீலா அவர்கள் மலையாளப்படங்களில் பாடிய 171 பாடல்களும்,
கன்னடத்தில் பாடிய 210 பாடல்களும் என் இசைத்தொகுப்பில் இருக்கிறது. சில ஹிந்தி படங்களில் கூட
பாடினார். Singhasan, kam kala dhandav, sanjog, kondura போல சில
குறிப்பட்ட படங்களில் பாடி இருக்கிறார்.
தவிர பக்தி பாடல்
ஆல்பங்களும், சம்ஸ்கிருத ஆல்பங்களும் பாடி இருக்கிறார்கள். மொத்தத்தில் 80’களில்
பாடிய பாடல்கள் 5000 க்கும் அதிகமாக இருக்கலாம். வேறு பாடகிகள் இந்த அளவுக்கு பாடி இருப்பார்களா
என்பது கொஞ்சம் சந்தேகமான விஷயம் தான். மற்றவர்கள் பாடிய பாடல்கள் ஆதாரபூர்வமாக
கிடைத்தால் மட்டுமே உண்மை விளங்கும் என நினைக்கிறேன்.
எப்போதும் பொது வலைத்தளங்களில் சில விமரிசனங்கள் வருவதுண்டு. இளையராஜாவின் வரவுக்கு பின் பி.சுசீலா காணாமல் போய்விட்டார், மார்க்கெட் இழந்து விட்டார், எஸ்.ஜானகியின் வெற்றியால், பி.சுசீலா பின்தங்கி விட்டார் என பலதரப்பட்ட விமரிசனங்கள். மொத்தத்தில் பார்க்கும் போது வலைத்தளங்களில் வரும் விமர்சனங்கள் உண்மை அல்ல என்பதை விளக்கவே இந்த கட்டுரை. பி.சுசீலா யாரிடமும் போய் வாய்ப்பு கேட்க வேண்டிய நிலையில் இருக்கவே இல்லை. அவர்களுக்கான வாய்ப்புகள் தெலுங்குப்பட உலகில் இருந்து கொண்டே இருந்தது. எல்லோரும் மதிப்புடனும், கண்ணியத்துடனும் பார்க்கும் விதத்தில் தன்னுடைய தொழிலை அவர் நேர்மையாய் செய்திருக்கிறார். 80-களில் வருடத்துக்கு சராசரியாக 450-முதல் 500 பாடல்கள் வரை பாடி இருக்கிறார். ( இது என்னிடம் இருக்கும் பாடல்களின் அடிப்படையில் மட்டுமே எழுதப்படுவது. எனக்கு தெரியாத பாடல்கள் இன்னமும் இருக்கும் ).
http://psusheela.org இல் பாடல்கள் இருக்கிறது.
எப்போதும் பொது வலைத்தளங்களில் சில விமரிசனங்கள் வருவதுண்டு. இளையராஜாவின் வரவுக்கு பின் பி.சுசீலா காணாமல் போய்விட்டார், மார்க்கெட் இழந்து விட்டார், எஸ்.ஜானகியின் வெற்றியால், பி.சுசீலா பின்தங்கி விட்டார் என பலதரப்பட்ட விமரிசனங்கள். மொத்தத்தில் பார்க்கும் போது வலைத்தளங்களில் வரும் விமர்சனங்கள் உண்மை அல்ல என்பதை விளக்கவே இந்த கட்டுரை. பி.சுசீலா யாரிடமும் போய் வாய்ப்பு கேட்க வேண்டிய நிலையில் இருக்கவே இல்லை. அவர்களுக்கான வாய்ப்புகள் தெலுங்குப்பட உலகில் இருந்து கொண்டே இருந்தது. எல்லோரும் மதிப்புடனும், கண்ணியத்துடனும் பார்க்கும் விதத்தில் தன்னுடைய தொழிலை அவர் நேர்மையாய் செய்திருக்கிறார். 80-களில் வருடத்துக்கு சராசரியாக 450-முதல் 500 பாடல்கள் வரை பாடி இருக்கிறார். ( இது என்னிடம் இருக்கும் பாடல்களின் அடிப்படையில் மட்டுமே எழுதப்படுவது. எனக்கு தெரியாத பாடல்கள் இன்னமும் இருக்கும் ).
http://psusheela.org இல் பாடல்கள் இருக்கிறது.