பின்பற்றுபவர்கள்

சனி, 13 செப்டம்பர், 2014

சலில் சௌத்ரி இசையில் பி.சுசீலா பாடிய பாடல்கள்


        இந்தியாவின் மிகச்சிறந்த இசை அமைப்பாளர்களில் ஒருவர் சலில் சவுத்ரி. பெங்காலி. ஹிந்தி மொழிகளில் பிரபலமாக இருந்தவர்.. நல்ல ஞானஸ்தனான இவர் கம்போஸ் செய்த பாடல்களை பாடுவது மிகவும் கடினம்  என கேள்விப்பட்டு இருக்கிறேன். ஹிந்தியை போலவே தென்னிந்தியாவிலும் இவர் பிரபலமாக இருந்தார். மலையாளத்தில் தேசிய விருது பெற்ற செம்மீன் படத்துக்கு இசை அமைத்தவர் இவர் தான். அதைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 25  மலையாளப்படங்களுக்கும் சில தமிழ் படங்களுக்கும் சில கன்னட திரைப்படங்களுக்கும் ஒரு தெலுங்கு படத்துக்கும் இசை அமைத்து இருக்கிறார்.
                         

       சலில் அவர்களுக்கு பி.சுசீலாவின் குரலினிமை மிகவும் பிடிக்கும். மிக நல்ல பாடல்களை பி.சுசீலாவுக்கு கொடுப்பார்.  பி.சுசீலா பாடினால் தான் நன்றாக இருக்கும் என நினைத்ததால், பாட சிரமமான சங்கதிகள்,. நிறைய மாடுலேஷன்கள் இருக்கும் பாடல்களை, பி.சுசீலாவையே பாட வைத்தார். ஹிந்தியில் கூட பி.சுசீலாவை பாட அழைத்தார். தென்னிந்தியாவில் பாடவே நேரம் போதாத நிலையில் இருந்த பி.சுசீலா அவர்கள் அந்த வாய்ப்புகளை மறுத்தார்.  சலில் அவர்கள் தென்னிந்திய படங்களுக்கு இசை அமைக்க சென்னை  வரும் போதெல்லாம் பி.சுசீலா அவர்களின் ஆர்மோனியத்தை ஸ்டுடியோவுக்கு வரவழைத்து அதை உபயோக்கிப்பாராம். இப்படி ஒரு நல்ல புரிதல் இசை அமைப்பாளருக்கும் பாடகிக்கும் இருந்தது. கிட்டத்தட்ட 25 பாடல்களுக்கு மேல் பி.சுசீலா சலில் இசையில் பாடி இருக்கிறார்.
            
      1971-இல் வெளிவந்த “Samshaya phalaஎன்ற கன்னட திரைப்படம் தான் இவர் இசையில் பி.சுசீலா முதலில் பங்குபெற்ற படம் என நினைக்கிறேன்.  இப்படத்தில் Harushaadooradaa meru என்ற அருமையான கம்போசிஷன் இருக்கிறது. இனிமையான மெலடி. பி.சுசீலாவின் குரலில் சோகமாய் ஒலிக்கும் பாடல். இப்பாடல் 1972-ல் “Anokha daan”  என்ற ஹிந்தி படத்தில் “Madbhari ye hawayen ஒலித்தது. பலரும் இது ஹிந்தியில் இருந்து காப்பி அடித்ததாக சொல்வார்கள், உண்மை அது இல்லை. கன்னடத்தில் இருந்து ஹிந்திக்கு சென்றது இந்த பாடல். பி.சுசீலாவின் வெர்ஷன் கொஞ்சம் கூடுதல் இனிமையுடன் ஒலிப்பதை நன்கு கேட்டு உணருங்கள். இதே படத்தில் மணம் முடித்து பெண்ணை கணவன் வீட்டுக்கு அனுப்பும் வரையான நிகழ்வுகளை ,பி.பி.ஸ்ரீநிவாஸ் , பி.சுசீலா குரல்களில் அமைந்த “idiga nee doorade” பாடல் காண்பித்தது.. தவிர “Kuniyutha jhanana jhanaஎன்ற இன்னொரு தனிப்பாடலும் பிரபலமானது. இதைத்தவிர “Ondhe rupa eradu guna” என்ற கன்னட படத்தில் Jila Jilanendu”  ஒரு டுயட் மிக பிரபலமானது. தவிர “pa pamagarisa, nee nagalu olidaஎன்ற டுயட்டும் பி.சுசீலாவின் குரலில் ஒலித்தது.
                   ( Harusha doorada meru- Samshaya Phala)
                  ( Idiga nee doorade - Samshaya Phala)    
                 ( Jila Jila nednu - Ondhe roopa Eradu guna )
       மலையாளத்தில் நெல்லு படத்தில் பி.சுசீலாவின் குரலில் “காடு குளிரணு கூடு குளிரணு” என ஒரு துள்ளிசைப்பாடல் இருக்கிறது. முதல் ஹம்மிங்கிலும், சின்ன சிலிர்ப்பிலும் குளிரை குரலியேயே கொண்டு வந்து விடுவார். பாடல் முழுவதும் அப்படி ஒரு எனெர்ஜி !!. இப்பாடல் சமீப காலத்தில் ரீமிக்ஸ் செய்யப்பட்டு அதுவும் ஹிட் ஆனது. அதைத்தொடர்ந்து கமல் நடித்த “ராசலீலா” படத்தில் “நீயும் விதவையோ நிலாவே” என நிலாவை பார்த்து கேட்கும் ஒரு இளம் விதவையின் தவிப்பை, உள்ளுணர்வை குரலில் கொண்டு வந்தார் பி.சுசீலா. மிகவும் பிரபலமான அருமையான பாடல். வயலாரின் வரிகளை பாராட்டியே ஆக வேண்டும். 
                  ( kaadu kulinu - Nellu )
                  
          இசை விருந்தாக அமைந்த “ராகம்” படத்தில் “அம்பாடி பூங்குயிலே பாடும்  அஞ்சன பூங்குயிலே” என்ற பாடல் கேட்க கேட்க திகட்டாத பாடல். இப்போதும் மலையாள சேனல்களில் பிரபலமான பாடல். தாலாட்டின் தாயான பி.சுசீலாவின் குரலில் “ஓமன திங்கள் பட்சி நீல தாமர குளத்திலே” என்றொரு அருமையான தாலாட்டு மனதை வருடும். இதே பாடல் “ஓமன திங்கள் பட்சி” என்று சோகமாகவும் ஒலிக்கிறது. மிக குறைந்த இசை ஒலியுடன் பி.சுசீலாவின் குரல் தெள்ளத்தெளிவாக, முழு தாய்மையையும் உணர்த்தும் வண்ணம் ஒலிக்கிறது. ஒரு பாடகியின் தரமும், எக்ஸ்ப்ரஷன் என்றால் என்ன என்பதும் இப்பாடலை கேட்டால் புரியும்.
                 ( Ambaadi poonkuyile - Raagam )

                  ( Omana thinkal pakshi - Raagam)
     மலையாள படமான “நீல பொன்மான்” திரைப்படத்தில் “தைய்யம் தைய்யம் தாரே” என Folk மற்றும் வெஸ்டெர்ன் கலந்த ஒரு பியுஷன் இசையுடன் ஒரு காடு சார்ந்த பாடல் வெளி வந்து வெற்றி பெற்றது. “Dhitang Dhitang bole”  என்ற பாடல் வங்காள மொழியில் ஒரு பிரபலமான  கிராமியப்பாடல். இது  ஹிந்தியில் “Dhitang Dhitang boleஎன லதாவின் குரலிலும் ஒலித்தது. 1955-ல் வெளிவந்த இப்பாடலின் டியுனை 1980-ல் மலையாளத்தில் திரும்பவும் கொஞ்சம் அதன் சாயலை மாற்றி உபயோகித்தார் சலில். ஜெயச்சந்திரன், பி.சுசீலா அவர்களின் குரலில் ஒரு திருவிழா களையை ஏற்படுத்தியது அந்த பாடல். கொஞ்சம் சிரமமான மலையாள வார்த்தை பிரயோகங்களால் அமைந்த பாடலை பி.சுசீலா அதன் அழகுடன் அருமையாக பாடி இருக்கிறார்.  
                 (Thayyam thayyam thare - neela ponman )
       விஷுக்கனி படத்தில் ஆவியாய் வந்து பாடும் “ராப்பாடி பாடுந்ந ராகங்ஙளில்” என ஒரு சுப்பர் ஹிட் பாடல் படி இருக்கிறார் பி.சுசீலா. இதே பாடல் ஹிந்தியில் “aaj noi gun gun gunjan premer என லதாவின் குரலில் ஒலித்தது. லதாவின் பாடல் என்றால் கண்ணை மூடிக்கொண்டு ஆஹா ஓஹோ என்பவர்கள் பி.சுசீலாவின் வெர்ஷனையும் கேட்டு சொல்லுங்கள். மெலடி, ஆழம், பினிஷிங் என எல்லாவற்றிலும் பி.சுசீலா கொஞ்சம் சிறப்பாகவே பாடி இருப்பது புரியும். நடிகை அம்பிகா ஒரு பேட்டியில் தனக்கு பிடித்த பாடலாக இப்பாடலை குறிப்பிட்டு இருந்தார். 
                   ( Raapadi padunna ragangalil -vishukani )
               “சமயமாயில்லாப்போலும்” படத்தில் குழந்தைகளுக்கான பாடலாக அமைந்தது “ஒண்ணாம் தும்பி நீ ஓடி வா”. சுசீலாம்மாவின் குரல் தெளிவு இப்பாடலில் பிரமாதமாய் இருக்கும்.  புதிய வெளிச்சம் படத்தில் மேற்கத்திய பாணியில் “ஜில் ஜில் ஜில் சிலம்பலங்கி விழியில்” என ஜெயச்சந்திரனுடன் ஒரு டூயட்  இருக்கிறது. “சுவந்ந பொட்டும் தெச்சிப்பூவும் மலரும் கொண்டு வந்தேன்” என்ற ஒரு கிராமியப்பாடலும் படத்தில் இடம் பெற்றது.
                                        ( Jill Jill Jill chilambalangi - Pudhiya velicham)
      தமிழில் கரும்பு என்ற படத்தில் “திங்கள் மாலை வெண்குடையான்” என்ற பாடலை பற்றி குறிப்பிட்டே ஆக வேண்டும். ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் இடம் பெற்ற ஆறு தொகுப்புகளில் ஒன்றான “கானல் வரி” தொகுப்பில், மிக குறிப்படத்தக்க பாடல்களில் ஒன்றான இப்பாடலை தேர்ந்தெடுத்தது, அதன் ஆழம் புரிந்து கொண்டு  அதன் மணம் மாறாமல் இசை அமைத்த சலில் சவுத்ரி அவர்களை எத்தனை பாராட்டினாலும் தகும். வங்காள மொழியை தாய் மொழியாக கொண்ட அவரும், மலையாளத்தை தாய் மொழியாய் கொண்ட ராமு கரியத் மற்றும் ஜேசுதாசும், தெலுங்கை தாய் மொழியாய் கொண்ட பி.சுசீலாவும் பழந்தமிழ் இலக்கியப்பாடலால் ஒன்று சேரும் வித்தை நடந்திருக்கிறது. அதை அவர்கள்  நேர்த்தியாய் செய்திருக்கிறார்கள். 
                 ( poo vannam pola nenjam - Azhiyatha kolangal)
         அழியாத கோலங்கள் படத்தில் “பூ வண்ணம் போல நெஞ்சம்” என ஜெயச்சந்திரனுடன் ஒரு அருமையான டுயட் இருக்கிறது. இப்பாடல் “பூமானம் பூத்துலஞ்சு” என மலையாளத்திலும் ஒலித்தது. “பூவண்ணம் போல நெஞ்சம்” தனிப்பாடலாகவும் தமிழில் ஒலித்தது. விஜயகாந்த் கதாநாயகனாக நடித்த முதல் படமான “தூரத்து இடி முழக்கம்” படத்தில் “வலை ஏந்தி கொள்வோம்” என்ற கடல் சார்ந்த பாடல் இடம் பெற்றது.
                   (valai enthi kolvom -doorathu idi muzhakkam)
    தெலுங்கில் “Chairman chalamayya” என்ற படத்தில் நான்கு பாடல்களை பாடினார் பி.சுசீலா. Nayanalu kalise”  மிக பிரபலமான பாடல். “Hello chairman Gaaru”,  Yesko Bullema, Tikku tikku  போன்ற பாடல்களும் இடம் பெற்றன. Madanolsavam தெலுங்கில் Amara prema  என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டது. அதில் ee priyuraliki pelle jarigenu”, (தேன் மலர் கன்னிகள்),  “paala mabbula” (மேலே பூமல ) என இரண்டு அருமையான பாடல்களை பாடினார் பி.சுசீலா. இப்பாடல்களின் இசையை சக்ரவர்த்தி உபயோகித்து கொண்டார். 
                  ( Hello Chairman Garu - chairman Chalamayya)
                  ( ee priyuraliki pelle- Amara prema )
                  ( paala mabbula - Amara Prema)

   25 பாடல்கள் இந்த தொகுப்பில் இருக்கிறது. பெரும்பாலானவை நல்ல முத்துக்கள். இத்தகைய இசையை தந்த சலீலும் அருமையாக பாடிய பி.சுசீலா அவர்களும் ரசிகர்கள் மனதில் நிரந்தரமாக இடம் பிடித்தவர்கள்.