ஒரு கலைஞரை இன்னொரு கலைஞர்
இதை விட அதிகமாக கௌரவப்படுத்த முடியாது. தன் கடைசி ஆசையாக, தனது அபிமான பாடகியின்
பாடலை கேட்க விரும்பும் அந்த ரசிகரின் வார்த்தையை விட பெரிய விருதுகளும் இருக்க
முடியாது. அப்படி ஒரு கவரவத்தை பி.சுசீலாவுக்கு அளித்தவர் கவிப்பேரரசு வைரமுத்து
அவர்கள். பாக்யராஜ் நடத்திய பாக்யா இதழில் “இந்த குளத்தில் கல் எறிந்தவர்கள்” (லிங்க்) என்ற
பெயரில் ஒரு தொடரை எழுதினார் வைரமுத்து அவர்கள். அதில் பி.சுசீலா அம்மையாரை
பற்றியும் சில பக்கங்கள் எழுதி இருந்தார். ( பின்னர் அது புத்தகமாகவும் வெளிவந்தது.) ஒவ்வொரு
பி.சுசீலா ரசிகர்களும் படித்து ரசிக்க வேண்டிய அருமையான படைப்பு அது. அதில் தான்
இப்படி ரசித்து, அனுபவித்து எழுதி இருந்தார் கவிப்பேரரசு அவர்கள்.
பெரும்பாலும்
திரைத்துறையில் இருப்பவர்கள் மேடை நாகரீகத்துக்காக மற்ற கலைஞர்களை புகழ்ந்து பட்டும்
படாமல் சில வார்த்ததைகள் பேசுவதுண்டு. தனக்கு பேர் வாங்கி தந்த பாடல்களை பாடிய
பாடகரையோ, அல்லது பாடகியையோ கூட தனக்கு பிடித்த பாடகராக அல்லது பாடகியாக சொல்ல
தயங்குவது உண்டு. ஆனால் தனக்கு பிடித்தமான
கலைஞர்களை பற்றி எந்த மேடையிலும் தயங்காமல் பேசுபவர் வைரமுத்து அவர்கள். ஒரு நல்ல
ரசிகரே கவிஞராக அமைந்ததாலோ என்னவோ அவரது பாடல்கள் ஒன்றுமே சோடை போகவில்லை. அதீத புலமையும்,
திறமையும் ஒருங்கே அமைந்ததால் எந்த கொம்பனாலும் அவரை அசைக்கவும் முடியவில்லை. திறமை இருக்கும் இடம் தேடி வாய்ப்புகள் வந்த வண்ணமே இருந்தன..
வைரமுத்து அவர்கள் இசைக்குயில் பி.சுசீலா அவர்கள் மேல் வைத்திருக்கும் மரியாதை அளவற்றது. உதாரணத்துக்கு குமுதம் இதழில் வெளிவந்த ஒரு கேள்வி பதில்..
வைரமுத்து அவர்கள் இசைக்குயில் பி.சுசீலா அவர்கள் மேல் வைத்திருக்கும் மரியாதை அளவற்றது. உதாரணத்துக்கு குமுதம் இதழில் வெளிவந்த ஒரு கேள்வி பதில்..
பி.சுசீலா அவர்களைப்பற்றி
பல மேடைகளிலும் புகழ்ந்து பேசி வருபவர் வைரமுத்து அவர்கள். ஜெமினி சினிமா என்ற
இதழில் தனக்கு பிடித்த 10 விஷயங்களை பட்டியல் இடும்
போது “நிலா நனைந்த ராத்திரியில் பி.சுசீலாவின் பாடல்கள்” என குறிப்பிட்டார்.
பி.சுசீலாவுக்கு ராஜ் டி.வி
நடத்திய பொன்விழாவில் வைரமுத்துவின் பங்கு இருந்தது. அத்தோடு அவரின் அருமையான
பேச்சும் முத்தாக அமைந்தது.
சமீபத்தில் விஜய் டி.வியில்
கூட அவர் சிறப்பு விருந்தினராக அமர்ந்த போது தன அபிமான பாடகியை பற்றி பேச
மறக்கவில்லை. பல பத்திரிக்கைகளிலும். தொலைக்காட்சிகளிலும், மேடைகளிலும் பி.சுசீலா
அவர்களை பற்றி பெருமையாக பேசி இருக்கிறார்.
பி.சுசீலா கின்னஸ் சாதனை
படைத்த செய்தி கேட்டு நேரில் சென்று பாராட்டிய நல்ல உள்ளங்களில் அவரும் ஒருவர்.
ஒரு புத்தர் சிலையை பரிசளித்து மகிழ்ந்தார்.
இந்த தொகுப்பில் பி.சுசீலாவின்
குரலில் ஒலித்த வைரமுத்துவின் பாடல்களை பார்க்கலாம்..
வைரமுத்து அவர்களின்
பாடல் வரிகளை பி.சுசீலா பாடிய அனுபவத்தை வைரமுத்து
அவர்களே பகிர்ந்து கொள்கிறார். பஞ்சமி என்ற படத்துக்காக இவர் எழுதிய “உதய காலமே நனைந்த மேகமே” என்ற பாடல் தான் பி.சுசீலாவின் குரலில் ஒலித்த முதல் வைரமுத்துவின்
பாடல். குரலிலும் வார்த்தைகளிலும் என்ன ஒரு தெளிவும் இனிமையும் !!! இந்த பாடலை பதிவு செய்யும் போது பி.சுசீலா அவர்களுக்கு 46 வயது என்றாலும் 16 வடது பெண் போல் குரலில் என்ன ஒரு இளமை!!!. பாடல் ஏன்
பிரபலம் ஆகாமல் போனது என தெரியவில்லை.. கேட்காதவர் ஒரு முறை தவறாமல் கேளுங்கள். இந்த பாடலுக்கு நண்பர் விக்கி அவர்கள் எழுதிய பக்கத்தை படியுங்கள்.. ( லிங்க் ) நமக்கு தெரியாத சின்ன சின்ன நுணுக்கமான விஷயங்களை கூட அலசி இருப்பார் அவர்.
1980-ல் ஊஞ்சல் என்றொரு திரைப்படத்தின் "கிராமபோன்" ரிக்கார்ட் கிடைத்தது. அதில் ஷ்யாம் இசையில் வைரமுத்து எழுதிய "பூமாலை" என துவங்கும் பாடலை பி.சுசீலா பாடி இருக்கும் தகவல் கிடைத்தது.
ராம நாராயணன் இயக்கிய "சிவப்பு மல்லி" படத்தில் இடம் பெற்ற "ரெண்டு கன்னம் சந்தன கிண்ணம்" பாடல் அக்கால கட்டத்தில் பிரபலமான பாடல்களில் ஓன்று. .. "நனைந்த மலர்களுக்கு குளிர் எடுக்காதோ, வண்டுகள் பறந்து வந்து தலை துவட்டதோ" என வைரமுத்துவின் கற்பனை பாடல் முழுவதுமே பரவிக்கிடக்கும். அப்படத்தில் "ஊருக்குள்ளே நான் தான் மகாராஜா" என்ற தெருக்கூத்து பாடல் ஓன்று TMS, T.L.மகாராஜன், பூங்குயிலன், பி.சுசீலா அவர்கள் குரலில் இடம் பெற்றது. கொஞ்சம் வசன நடையில் ஒலித்த "ஆண் தொடாத கன்னிப்பெண்ணை" என்ற பாடலை TMS, பி.சுசீலா இணைந்து பாடினர். "அவள் மோகமூச்சு இன்று தீயை சுட்டது" என்று வைரமுத்துவின் தனித்துவமான வரிகள் பாடலில் இடம் பெற்றன.
Vairamuthu on "Rendu kannam" song
|
கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த "தண்ணீர் தண்ணீர்" படத்தில் இடம் பெற்ற "கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே" என்ற தாலாட்டு பாடல் ஒரு கிராமத்து தாயின் சோகத்தை மொத்தமாக பிரதிபலித்தது. தண்ணீரின்றி தவிக்கும் மக்களின் துயரத்தை மொத்தமாக பிரதிபலிக்கும் பாடல் அது. "ஊத்து மலை தண்ணீரே என் உள்ளங்கை சர்க்கரையே" என்பது போல் மிக இயல்பான கிராமத்து வரிகளை சூழ்நிலைக்கு ஏற்றவாறு பாடலில் அருமையாக பிரயோகித்து இருப்பார் வைரமுத்து அவர்கள்.
"தண்ணி தந்த மேகம் இன்று
ரத்த துளி சிந்துதடா
காத்திருந்த பானைக்குள்ளே
கண்ணீர் துளி பொங்குதடா
வீட்டு விளக்கெரிவதற்கு
கண்ணே எண்ணெய் இல்லையடா"
இந்த பாடல் பற்றி வைரமுத்து அவர்கள் என்ன சொல்கிறார்கள் ? வீடியோவை பாருங்கள்..
"என் வீணை போனதெங்கே
கலைகின்ற ராகம் இங்கே
அவன் தூங்க வைத்தேன் அங்கே
என் தூக்கம் எங்கே
இந்த இரவு விடிந்து விட வேண்டும்
இல்லை..
பருவம் கரைந்து விட வேண்டும் "
பூமுகம் சிவக்க - வைரமுத்து
|
"தாய்மையின் தவிப்பால் குழந்தையை எடுப்பாள்
பூக்களினால் முகம் துடைப்பாள்
சேலையின் தலைப்பால் காற்றினை தடுப்பாள்
காயம் படும் என நினைப்பாள்
துரும்பு விழுந்தால் முகம் சிவப்பாள்
அவள் தன்மேனி கொடுப்பாள்
தன் கண்ணீரில் இனிப்பாள்"
ஸ்ரீதர் இயக்கி கார்த்திக் - ஜிஜி நடிப்பில் வெளிவந்த நினைவெல்லாம் நித்யா படத்தில் இடம் பெற்ற "கன்னிப்பொண்ணு கைமேல கட்டி வச்ச பூமால" பாடலும் வைரமுத்துவின் வரிகளே.
மஞ்சு பார்கவி நடிப்பில் வெளிவந்த "மகனே மகனே" படத்தில் இருக்கும் ஒரே மகனும் தன்னை பார்க்க வராத ஏக்கத்தில்
"மகனே இளமகனே நான் அழுதேன் உன்னை எண்ணி" என தாய் நெஞ்சுருகி பாடும் பாடும் பாடல் இடம் பெற்றது. ஒவ்வொரு வரியிலும் அந்த ஏக்கத்தை வெளிப்படுத்தி இருப்பார் வைரமுத்து அவர்கள்.
"கருவில் வந்த பந்தமெல்லாம் கணக்கு சொல்லவில்ல
இடுப்ப விட்டு போன பின்னே எனக்கு சொந்தமில்ல
நெஞ்சுக்குள்ள தீமூட்டி உள்ளங்கையில் சோறாக்கி
இறக்கி வச்சேன் மகனை மட்டும் காணவில்ல"
"பாட வந்ததோ கானம் பாவை கண்ணிலோ நாணம்" என ஜேசுதாஸ்-பி.சுசீலா குரல்களில் ஒலித்த பாடலை எழுதியவரும் வைரமுத்து அவர்களே..
"தேர்கொண்டு சென்றவன் யாரென்று சொல்லடி தோழி" என்ற வரிகளுக்கு சொந்தக்காரரும் வைரமுத்து அவர்களே ..
( பாகம் -2 ) |
Ther kondu sentravan
|
Excellent compendium of P Susheelaji-Vairamuthu songs!. Great work Kalai....
பதிலளிநீக்குThanks Vicky Iyengar !
நீக்கு