பின்பற்றுபவர்கள்

வியாழன், 11 மே, 2017

ஜி,ராமநாதன் இசையில் பி.சுசீலா பாடிய பாடல்கள்- 1

   

     
             சிலருக்கு ஈடு இணை என்பது கிடையவே கிடையாது.. அவர்களுக்கு இணை அவர்கள் மட்டும் தான். பலரும் அந்தந்த துறையில் அந்தந்த கால கட்டங்களில் புகழேணியில் ஏறி அமர்ந்து  புகழும் பணமும்  சம்பாதித்து, அடுத்த தலைமுறை வந்ததும் வாய்ப்புகள் குறைந்து ஒதுங்கி விடுகிறார்கள். ஆனால் எதை விட்டு செல்கிறார்கள் என்பது தான் சிந்திக்க வேண்டிய விஷயம். பல தலைமுறைகள் கடந்தும்,  நிறைய ரசனை மாற்றங்கள் நடந்தும் கூட சிலரின்  தரத்தால் அந்த படைப்புகள் இப்போதும் போற்றப்படுகின்றன. ..அப்படிப்பட்ட பல பாடல்களுக்கு இசை அமைத்த ஒரு மாபெரும் மேதை தான் ஜி.ராமநாதன் ஐயர் அவர்கள். அவருக்கு இணை அவர் தான். வேறு யாரையும் ஒப்பிடவே முடியாது.. அவர்  இசையில் வந்த எந்த பாடல்களிலும்  தரம் குறைந்ததே இல்லை.  தமிழ் சினிமாவில் பாடுவதற்கு கஷ்டமான பல பாடல்களுக்கு இசை அமைத்தவர் இவர் என்றால் மிகை இல்லை. அதனால் தான் என்னவோ பல நல்ல பாடகர்கள் ஐம்பதுகளில் உருவானார்கள்.  இவரது  இசை பலரால் காப்பி அடிக்கப்பட்டு, பல வடிவங்களில் வெளிவந்து மற்றவர்களுக்கும் வெற்றியை தேடி தந்திருக்கிறது என்பதே உண்மை.


   
     இசை சக்கரவர்த்தி ஜி.ராமநாதன் அவர்கள் 1940-ல் இருந்து தமிழ் படங்களுக்கு இசை அமைத்து வருகிறார். அறுபது வரை தமிழில் வெளிவந்த பல முக்கியமான திரைப்படங்களுக்கு இவர் இசை அமைத்து இருக்கிறார். சிவகவி, ஹரிதாஸ், ஜகதல பிரதாபன், ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி, ரத்னகுமார், மங்கையர்க்கரசி, மந்திரிகுமாரி, தூக்கு தூக்கி, நல்ல தங்கை, மதுரை வீரன், அம்பிகாபதி, வீரபாண்டிய கட்டபொம்மன். கப்பலோட்டிய தமிழன், உத்தம புத்திரன், அரசிளங்குமரி என பல முக்கியமான படங்களுக்கு இசை அமைத்தவர் இவர் தான். எந்த ஒரு பாடலையும் குறை சொல்ல முடியாது என்பது போல் எல்லா பாடல்களுமே அதற்கான தரத்துடன் இசை அமைத்தவர் ராமநாதன் அவர்கள். இவர் 1963-ல் இயற்கை எய்தினார். 

        பி.சுசீலா தமிழில் அறிமுகமான போது ஜி.ராமநாதன் அவர்கள் உச்சத்தில் இருந்தார். கிட்டத்தட்ட அறிமுகமாகி ஐந்து வருடங்கள் கழித்து பல ஹிட்ஸ் கொடுத்து முதல் நிலையை அடைந்த பின்னரே ஜி.ராமநாதன் இசையில் பி.சுசீலா பாடினார். முதன் முதலில் ஜி.ராமநாதன் இசையில் பாட சென்ற போது “இப்போது தான் என் இசையில் பாட நேரம் கிடைத்ததா?” என கேட்டதாக பி.சுசீலா அவர்கள் ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார். ஆனால் அதற்கு பின் அவர் இசை அமைத்த பல  படங்களிலும் பிரதான பாடகியாக பி.சுசீலாவை பாட வைத்து நிறைய நல்ல பாடல்களை அளித்தார். அவர் கடைசியாக இசை அமைத்த “\தெய்வத்தின் தெய்வம்” படத்தில் கூட கதாநாயகி பாடும் பாடல்களை பி.சுசீலாவே பாடினார்.    

      பி.சுசீலா பாடுவதற்கான பாடல்களை கம்போஸ் செய்யும் போதே நிறைய சங்கதிகளை அழகாய் கோர்த்து அந்த அமுதக்குரலில் பாட வைத்து ரசிகர்களை மயங்க வைத்து விடுவார் ஜி.ராமநாதன் அவர்கள். எந்த பாடலை எடுத்துக்கொண்டாலும் அதில் ஓர் அழகும் தரமும்  இருக்கும். எல்லா வித  சங்கதிகளையும் பி.சுசீலாவின் குரலில் முயற்சித்து அதில் வெற்றியும் பெற்று இருக்கிறார். அவர் இசையில் பி.சுசீலா பாடிய ஒரு  பாடல் கூட சோடை போகவில்லை என்பது சிறப்பு..  பி.சுசீலாவுக்கு பெரும் புகழை  பெற்றுக்கொடுத்த பெருமை ஜி.ராமனாதன் என்ற இசை மேதையின் பாடல்களுக்கு உண்டு.


               இந்த கூட்டணியில் 1957-ல் வெளி வந்த வணங்காமுடி பட பாடல்களை குறிப்பிட்டே ஆக வேண்டும். இப்படத்தின் டைட்டில் கார்டிலேயே பி.சுசீலாவின் பெயர்  ஜிக்கி, லீலா ஆகியோரின் பெயருக்கு முன்னாலேயே வருகிறது. “என்னைப்போல் பெண்ணல்லவோ”, “வாழ்வினிலே வாழ்வினிலே இந்நாள் இனி வருமா”, “மோகன புன்னகை செய்திடும் நிலவே”, “ராஜயோகமே பாரீர்” என நான்கு மனதை மயக்கும் பாடல்களை பாடி இருந்தார் பி.சுசீலா அவர்கள்.  “என்னைப்போல் பெண்ணல்லவோ” என்ற பாடலை பாடிய அனுபவத்தை பி.சுசீலா இப்படி பகிர்ந்து கொண்டார்.. “எம்.எல்.வி போன்றவர்கள் பாட வேண்டிய கர்நாடக இசைப்பாடலை என்னை நம்பி அந்த இள வயதிலேயே பாட வைத்தவர் ஜி.ராமநாதன் அவர்கள்”. முழுக்க முழுக்க கர்நாடக இசையில் அதுவும் தோடி ராகத்தில் அமைந்த பாடல் இது. மாபெரும் கர்நாடக இசை கலைஞர்களே தோடி ராகத்தில் அமைந்த சிறப்பான பாடலாக இதை குறிப்பிடுவார்கள். இப்பாடலுக்கு நண்பர் விக்கி எழுதிய கட்டுரையை படியுங்கள்.  ( லிங்க் ).. பி.சுசீலாவின் குரலில் வெளி வந்த முக்கியமான பாடல்களில் ஓன்று இது.    வணங்காமுடி படத்தில் டி.எம்.எஸ்சும் பி.சுசீலாவும் இணைந்து பாடிய  “மோகனப்புன்னகை செய்திடும் நிலவே மேகத்திலே நீ மறையாதே” பாடல் கேட்க கேட்க சலிக்காத காதல் பாடல்களில் ஓன்று. பாடலின் சரணத்தில் ஒவ்வொரு வரி முடியும் நேரத்திலும் பி.சுசீலாவின் குரலில் ஒரு நீளமான ஹம்மிங் என கம்போஸ் செய்திருப்பார் ஜி.ராமநாதன் அவர்கள். இப்பாடலுக்கு நண்பர் விக்கி எழுதிய கட்டுரையை படியுங்கள்.  (லிங்க் ).

 
        

         

      படத்தின் ஆரம்ப பாடலாக சாவித்திரி தன தோழிகளுடன் ஆற்றில் பயணம் செய்துகொண்டே பாடுவது போல் அமைந்த “ராஜ யோகமே பாரீர்” என்ற பாடலையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். அழகு கொஞ்சும் சுகமான பாடல்களில் ஓன்று..

      ஏ.எம்.ராஜா மற்றும் பி.சுசீலா பாடிய “வாழ்வினிலே வாழ்வினிலே இந்நாள் இனி வருமா” என்ற பாடல் மனம் மயக்கும் மென்மையான காதல் பாடல்களில் ஓன்று. அழகழகான ஹம்மிங்குகள், சின்ன சின்ன சங்கதிகள் ஒவ்வொரு வரியுமே கேட்க அவ்வளவு சுகமாக இருக்கும்.  

     ( Thanukaragadavaralli Pushpava )
        


Vaazhvinile Vaazhvinile

        

                     ஐம்பதுகளில் வந்த இன்னொரு மாபெரும் வெற்றிப்படம் சிவாஜி மற்றும் பத்மினி நடிப்பில் வெளியான “உத்தம புத்திரன்” என்ற திரைப்படம். அதிலும் கதாநாயகி பத்மினிக்காக “உன்னழகை கன்னியர்கள் சொன்னதினாலே”, "முல்லை மலர் மேலே”, “அன்பேஅமுதே அருங்கனியே”., “மண்ணுலகெல்லாம் பொன்னுலகாக மாறிடும் வேளை” என பல தலைமுறைகளையும் கடந்து ஜெயிக்கும் தரமான பாடல்களை அளித்தார் ஜி.ராமநாதன் அவர்கள்.
          “உன்னழகை கன்னியர்கள் சொன்னதினாலே” பாடல் பி.சுசீலாவின் மகுடத்தில் ஒரு வைரக்கல். அதுவும் கடைசியில் வரும் அந்த நீளமான ஹம்மிங்கில் என்ன ஒரு breath Control !!   
  தமிழ் திரை உலகம் இது வரை கண்ட அபூர்வமான டூயட்டுகளில் “முல்லை மலர் மேலே”  பாடலும் ஓன்று. எத்தனை காலங்கள் கடந்தும் அப்பாடல் இப்போதும் உயிர்ப்புடன் இருக்கிறது !!

          Mullai Malar Mele
        



Unnazhai kanniyargal        

     மண்ணுலகெல்லாம் பொன்னுலகாக மாறிடும் வேளை பாடலில் பி.சுசீலாவும் ஜிக்கியும் இணைந்து கலக்கி இருப்பார்கள்.. இரண்டு குரலும் ஒரே அலை வரிசையில் பெண்மையின் நளினம் பொங்க ஒலிக்கும். குதிரை வண்டி ஓட்டிக்கொண்டே பாடுவது போல அமைந்த பாடல் காட்சியில் இசையும் குதிரை போல ஓடும் வண்ணம் அமைந்திருக்கும்.
      “அன்பே அமுதே அருங்கனியே” பாடலை கேட்காத ஆண்கள் ஒரு முறை கவனித்து கேட்டு பாருங்கள்.. “என்ன தவம் செய்தேன் கண்ணா, உன்னுடன் உறவாட ஆசை மன்னா” என இரண்டாவது சரணத்தில் வரும். வரிகளை அனுபவித்து உணருங்கள். கண்ணா என பாடும் போது அந்த ஹம்மிங்கிலேயே தொனிக்கும் முழு ஏக்கமும் ஆசையும் நம்மை புல்லரிக்க  வைக்கும்.. அடுத்த கண்ணா முடிந்ததும் “உன்னுடன் உறவாட ஆசை மன்னா” என பாடும் போது ஒவ்வொரு எழுத்திலும் காதல் உணர்வு பொங்கி நிற்கும். கொஞ்சம் கூட ஆபாசம் இல்லாமல் அந்த வரிகளை எத்தனை அழகு படுத்தியிருக்கிறார்கள் பாடகர்கள் !!

     ( Mannulagellam ponnulagaga)
        


Anbe Amuthe 

    1959-ல் வெளிவந்த “வீர பாண்டிய கட்டமொம்மன்” தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு மைல்கல்.. அந்த படத்தில் இடம் பெற்ற “இன்பம் பொங்கும் வெண்ணிலா” பாடலை மறக்க முடியுமா?”.. சமீபத்தில் கூட ரீமிக்ஸ் செய்து பி.சுசீலாவின் குரலை மாற்றாமல் அப்படியே வைத்து வெளியிட்டு இருந்தார்கள். இளமை துள்ளலும், மென்மையும் கலந்து அழகழகான ஹம்மிங்குகளுட்ன் அந்த பாடலை அனுபவித்து பாடி இருப்பார்கள் பி.பி.எஸ்சும், பி.சுசீலாவும்.

    .அதே போல் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டில் விளையாடும் காளையை புகழ்ந்து பாடும்  “அஞ்சாத சிங்கம் என் காளை” என்ற பாடலை பி.சுசீலா பாடினார். மிகவும் அழகான் பாடல்.

    ஜி.வரலக்ஷ்மி அவர்களின்  தனித்துவம் வாய்ந்த குரலுடன்  இணைந்து பி.சுசீலா அவர்கள் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் சில பாடல்களை பாடி இருக்கிறார்கள். இப்படத்தில் ஜி.வரலக்ஷ்மி, பி.சுசீலா, A.P.கோமளா மூவரும் இணைந்து “டக்கு டக்கு டக்குன்னு” என்று ஒரு பாடலை பாடி இருக்கிறார்கள்.
     

     ( Thanukaragadavaralli Pushpava )
        
        

   ஐம்பதுகளில் வந்த சில அருமையான பாடல்களை வரிசை  படுத்துகிறேன்.  





கண்ணோடு கண் கலந்தால் ( மாங்கல்ய பாக்கியம் )


எனையே மறந்து அழைத்ததனாலே  ( வாழக்கை ஒப்பந்தம் )
.
தாயே இது நியாயமா ( நான் சொல்லும் ரகசியம் )

கண்டேனே உன்னை கண்ணாலே ( நான் சொல்லும் ரகசியம் )

இந்த மாநிலத்தைபாராய் மகனே ( கல்யாணிக்கு கல்யாணம் )


தொடரும் ....

Part 2




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக