பின்பற்றுபவர்கள்

திங்கள், 13 ஜூலை, 2015

M.S.விஸ்வநாதன் இசையில் பி.சுசீலா பாடிய பாடல்கள்.- Part1

                                               

             இசைக்குயில் பி.சுசீலா அவர்கள்,   இத்தனை பெயரையும் புகழையும், உலகம் முழுக்க ரசிகர்களையும்  பெறுவதற்கு  எம்.எஸ்.விஸ்வநாதன் – ராமமூர்த்தி அவர்களின் இசை பெருமளவில் உதவி இருக்கிறது.  இசை மேதை சுப்பராமன் மறைவுக்கு பின் அவர் இசை அமைத்து பாதியில் நின்ற ஜெனோவா, தேவதாஸ், சண்டிராணி போல சில  படங்களின் இசையை  எம்.எஸ்.வி நிறைவு செய்தார். பி.சுசீலாவின் குரலை கேட்டு அவருக்கு ஒரு வாய்ப்பு அளிக்க விரும்பிய எம்.எஸ்.வி, சண்டிராணி  படத்தில்  “மாநிலம் புகழ்” பாடலில், ஒரு ஹம்மிங் மட்டும் பாட வைத்தார். ( Link ). அது தான் எம்.எஸ்.வி இசையில் அவர் பணி ஆற்றிய முதல் பாடல்.  அதன் பின் எம்.எஸ்.வி அவர்களும் வயலின் இசை மேதையான ராமமூர்த்தி அவர்களும் இணைந்து விஸ்வநாதன்-ராமமூர்த்தி என்ற பெயரில் பணம் படத்தின் மூலமாக இசை அமைப்பாளர்களாக அறிமுகம் ஆனார்கள். ஆனாலும் சில வருடங்களுக்கு அப்புறம் தான் அவர்களால் பி.சுசீலாவுக்கு வாய்ப்பு அளிக்க முடிந்தது. பி.சுசீலா அவர்கள் ஓரளவு பிரபலம் ஆகிய பின் Santosham (1956)” என்ற தெலுங்கு படத்தின் மூலமாக மீண்டும் விஸ்வநாதன்- ராமமூர்த்தி  இசையில் பாடினார்கள்.
                                                                              

                      இப்போது இருப்பது போல் ஐம்பதுகளிலும் நிறைய பாடகிகள், நிறைய இசை அமைப்பளர்கள் இருந்தார்கள்.  பாடகிகளை பொருத்தவரை ஜிக்கி, லீலா, பி.சுசீலா, பாலசரஸ்வதி தேவி, பெரியநாயகி, ஜமுனாராணி, கே.ராணி, ஏ.பி.கோமளா, எம்.எல்.வசந்தகுமாரி, டி.எஸ்.பகவதி , பானுமதி, வரலக்ஷ்மி, எம்.எஸ்.ராஜேஸ்வரி என பல திறமையான பாடகிகள் இருந்தார்கள். எல்லோருக்கும் தனித்துவம் இருந்ததால் வாய்ப்புகளும் இருந்தன. ஏ.வி.எம் நிறுவன பாடகி ஆன பின் பி.சுசீலாவும் நிறைய படங்களில் பாடி பெயர் பெற்றிருந்தார். . மிஸ்ஸியம்மா, கணவனே கண்கண்ட தெய்வம்,  பெண், கோடீஸ்வரன், அனார்கலி போன்ற படங்களில் பல ஹிட்ஸ் கொடுத்திருந்தாலும்,’ஜிக்கி, லீலா வரிசையில் அவரும் ஒன்று என்ற நிலையிலேயே இருந்தார். ஆனால் விஸ்வநாதன்- ராமமூர்த்தி இசையுடன் அவர் குரல் சேர்ந்த போது தான் அவரின் முழுத்திறமையும் வெளிவந்து, அவரால் பல சிகரங்களை எட்ட முடிந்தது.  அவர்கள்  பி.சுசீலாவுக்கு நிறைய வாய்ப்பும்,  பயிற்சியும்  கொடுத்து நன்றாக பாட வைத்து மக்கள் மனதில் அவருக்கென ஒரு நிரந்தர இடத்தை தேடிக்கொடுத்தார்கள். ( கே.வி.எம், ராஜேஸ்வர ராவ், பெண்டியாலா, ஜி.தேவராஜன், ஜி.ராமநாதன், ஆதிநாராயண ராவ் போன்றோருக்கும் இந்த வெற்றியில் பங்குண்டு.) 

சில குறிப்பிடபடத்தக்க உண்மைகள்.....

1. பி.சுசீலா அவர்கள் கே.வி.மகாதேவன் இசையிலும்  சக்ரவர்த்தி அவர்களின்  இசையிலும் தலா 2000 பாடல்களுக்கு மேல் பாடி இருக்கிறார். ஆனால், தமிழில் அதிகம் பாடியது எம்.எஸ்.வி அவர்கள்  இசையில் தான். கிட்டத்தட்ட ஆயிரம் பாடல்களை  தமிழிலேயே பாடி இருக்கிறார். மற்ற மொழி பாடல்களையும், டப்பிங் பட பாடல்களையும் சேர்த்தால் 1500 -ஐ நெருங்கலாம்.

2. பி.சுசீலா தமிழுக்காக வாங்கிய இரு தேசீய விருதுகளும்  எம்.எஸ்.வி இசையில் பாடிய பாடல்களுக்காகவே கிடைத்தது. ( பால் போலவே  & சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு)

3. தமிழில் வாங்கிய மூன்று மாநில விருதுகளுக்கும் இசை அமைத்தவர் எம்.எஸ்.வி அவர்கள் தான். ( "பிருந்தாவனத்துக்கு வருகின்றேன்" , "ஆழக்கடல் நீந்தி வந்தேன்" & "மகனே மகனே கண்ணுறங்கு")

4. பி.சுசீலா  அவர்கள் எம்.எஸ்.வி இசை அமைத்த Naa Laaga Endaro (1978) என்ற தெலுங்கு படத்தில் "Kalyani nee" என்ற பாடலுக்காகவும் மாநில விருது வாங்கி இருக்கிறார்.

5. எம்.எஸ்.வி இசையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியவர்கள் டி.எம்.எஸ் மற்றும் பி.சுசீலா அவர்கள். ( நீராறும் கடலுடுத்த )

6. 1952-ல் சண்டிராணி படத்தில் பாட துவங்கி 2009-ல் எம்.எஸ்.வி இசை அமைத்த "வாலிபன் சுற்றும் உலகம்" வரை கிட்டத்தட்ட 57 வருடங்கள்  இருவரும் ஒன்றாக பணி புரிந்து இருக்கிறார்கள். அதிலும் 1956-ல் இருந்து 1991 வரை கிட்டத்தட்ட் 36 வருடங்கள் இடை வெளியே இல்லாமல் எல்லா வருடமும் எம்.எஸ்.வி இசையில் திரைப்பாடல்களை பி.சுசீலா பாடி இருக்கிறார். இந்த அளவுக்கு நீண்ட காலம் ஒரே துறையில் இணைந்து பணியாற்றிவர்கள்  இருப்பது அபூர்வமான ஒன்று.

7. எம்.எஸ்.வி இசை அமைத்த கண்ணன் பாமாலை ( "கோகுலத்தில் ஒரு நாள் ராதை", "குருவாயூருக்கு வாருங்கள்"), வேளாங்கண்ணி வீணை ("அலை கடலின் ஓசையிலே", "அம்மா தேவனின் தாயே") போல பல  பக்தி ஆல்பங்களிலும் பி.சுசீலா பாடி இருக்கிறார்.

8. எம்.எஸ்.வி தனது சுய சரிதையில் "நெஞ்சம் மறப்பதில்லை" பாடலின் வெற்றிக்கு 75% பி.சுசீலா தான் காரணம் என குறிப்பிட்டிருக்கிறார். எத்தனை பெரிய மனது அவருக்கு!!. தனக்கு பெயர் வாங்கி தந்த பாடகியின் குரலை சுமார் தான் என சொல்லும் இசை அமைப்பாளர்கள் மத்தியில், பாடகர், பாடகியரால் தனக்கும் பெயர் வந்தது என சொல்லும் எம்.எஸ்.வி எவ்வளவு  உயர்ந்தவர் !!

9. எம்.எஸ்.வி இசையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் பாடி இருக்கிறார் பி.சுசீலா அவர்கள்,

10. கற்பகம் படத்தில் இடம் பெற்ற ஐந்து பாடல்களையுமே பி.சுசீலாவை மட்டுமே பாட வைத்து வெற்றி பெற வைத்தவர் எம்.எஸ்.வி அவர்கள்.

11, எம்.எஸ்.வி அவர்கள் தன்னுடைய பல புதிய முயற்சிகளுக்கும் பி.சுசீலாவின் குரலை பயன்படுத்தி இருக்கிறார். ஹிந்துஸ்தானி இசை ( கர்ணன் பாடல்கள்), கஸல் பாடல்கள் ( வாழ்க்கைப்படகு, காவிய தலைவி), வெஸ்டர்ன் இசை ( காதலிக்க நேரமில்லை, புதிய பறவை ), Opera Music ( ராஜா மலயசிம்மன்),  (தெருக்கூத்து ( நாடாள வந்தாரு ), ஸ்வரத்துக்கு ஏற்ற சிரிப்பு ( சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே), எகிப்திய  இசை ( நினைத்தேன் வந்தாய் நூறு வயது), கவிதை நடையில்  பாடல்கள் (அக்னி  சாட்சி),  நாட்டிய நாடகம் ( பெற்றெடுத்த உள்ளம் என்றும்),  பஞ்சாபி ஸ்டைல் (ஆடலுடன் பாடலை கேட்டு),  குறவன் குறத்தி (நாங்க புதுசா கட்டிகிட்ட), குறைந்த வாத்திய கருவிகள்  ( தண்ணீர் தண்ணீர்) இப்படி பல முயற்சிகள் இவர்கள் கூட்டணியில் வெற்றிகரமாக நடந்தது.



                 பி.சுசீலாவுக்கு மிக பெரிய சவால்கள் இருந்தன. தென்னக இசையை பொறுத்த வரை கர்நாடக இசை தெரிந்திருக்க வேண்டும். அதில் தேர்ச்சி பெற்ற எம்.எல்.வசந்தகுமாரி. பி.லீலா, ஏ.பி.கோமளா போன்றோருக்கு ஈடு கொடுக்க வேண்டும். பாலசரஸ்வதி போல் மென்மையான தாலாட்டும் பாட வேண்டும், ஜிக்கி போல மெல்லிசையிலும் மிளிர வேண்டும், அதே நேரம் வட இந்திய இசையை தழுவிய அல்லது காப்பி அடித்த பாடல்களை அதே நளினத்துடன் பாடவும் வேண்டும். லதா மங்கேஷ்கர், ஆஷா போன்ஸ்லே பாடிய பாடல்களை இங்கே பாடும் போது உடனடியாக அவர்களுடன் ஒப்பிடுவதால் அதே தரம் குறையாமல் பாட வேண்டும்,. அங்கிருக்கும் ஹிந்துஸ்தானி கிளாசிக்கல் பாடல்கள், மென்மையான காதல் பாடல்கள், கவ்வாலி, முஜ்ரா, லம்பாடி போன்ற பாடல்கள் என எல்லாவற்றையும் அதன் அழகு கெடாமல் பாட வேண்டும் என பல சவால்கள் இருந்தன. அதை கடுமையான உழைப்பாலும் அதீத திறமையாலும் சாதித்தார் பி.சுசீலா. பல்வேறு இசை ஜாம்பவான்களிடம் பணி ஆற்றி பெற்ற பயிற்சி  அவர் குரலை வைரம் போல் பட்டை தீட்டியது. கர்நாடக இசையில் கைதேர்ந்த ஜி.ராமநாதன் இசையிலும், ஹிந்துஸ்தானி இசையில் கைதேர்ந்த ஆதிநாராயண ராவ், ராஜேஸ்வர ராவ் போன்றவர்களிடம் பாடி பெற்ற பயிற்சி அவருக்கு எவ்வகை பாடல்களையும் கையாளும் திறமையும், தன்னம்பிக்கையும் அளித்திருந்தது. அத்துடன் இசை அறிவும், அதீத கற்பனை வளமும், பல புதுமைகளை செய்யும் முயற்சியும் சேர்ந்த விஸ்வநாதன்-ராமமூர்த்தி அவர்களின் இசையுடன் சுசீலாவின் குரல் இணைந்த போது அந்த குரலின் வீரியம் பல மடங்கு உயர்ந்து தென்னகத்தையே மயக்கியது. ஒரு பேட்டியில் பி.பானுமதி குறிப்பட்டது போல் பி.சுசீலாவுக்கு பின்  இன்னமும் அதைப்போல் ஒரு குரல் வரவில்லை. (proof)
                    எம்.எஸ்.வி அவர்கள் எஸ்.வி.வெங்கட்ராமன், எம்.எஸ்.சுப்பையா நாயுடு, சி.ஆர்.சுப்பராமன் போன்றோருடன் பணி புரிந்து இசை நுணுக்கங்கள் கற்றிருந்தார். காவேரி படத்தில் ஜி.ராமநாதனுடன் இணைந்து பணி ஆற்றி இருக்கிறார். பெரும்பாலான இசை அமைப்பாளர்கள், கர்நாடக இசை தழுவிய பாடல்களையும், ஹிந்தி டியுன்களை தழுவிய பாடல்களையுமே அளித்து வந்தார்கள். ஆரம்ப காலத்தில் விஸ்வநாதன்-ராமமூர்த்தி கூட நமது பாரம்பரிய இசை சார்ந்த பாடல்களையே நிறைய அளித்திருக்கிறார்கள்  என்றாலும் கொஞ்சம் கொஞ்சமாக மெல்லிசையை அவர் இசை அமைத்த படங்களில் இடம் பெற செய்தார்கள். நிறைய புதுமைகளை அவர்கள் இசையில் கொண்டு வந்தார்கள். அதனால் 50-களின் இறுதியிலேயே தமிழ் திரைப்பட இசை அவர்கள் வசமானது.
              எம்.எஸ்.வி அவர்கள் எந்த பாடகியாக இருந்தாலும் அவர் நினைத்த அளவுக்கு நேர்த்தி கிடைப்பது வரை பாட வைத்து, ரிஹர்சல் கொடுத்து கொண்டே இருப்பார். அடிக்கடி சங்கதிகளை மாற்றிக்கொண்டே இருப்பார். இதனால் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ரிக்கார்டிங் முடியும் என சொல்லவே முடியாது. ரிக்கார்டிங் முடியும் நேரத்தில் கூட, ஒரு சங்கதி இன்னும் அழகு சேர்க்கும் என நினைத்தால் மீண்டும் ஒரு முறை ரிக்கார்டிங் செய்வார். பாடல் தரமாக வர வேண்டும் என்பதில் அப்படி ஒரு கவனம், அயராத உழைப்பு !!!. ( அதே உழைப்பு பாடகர், பாடகிக்கும் தேவைப்பட்டது). அதைப்போல் வார்த்தைகளின் உச்சரிப்பிலும் மிக கவனம் எடுத்துக்கொண்டார். அதே நேரம் சுமாரான குரல் வளம் இருக்கும் பாடகிகளுக்கு அதற்கேற்றாற்போல் எளிதான பாடல்களை கம்போஸ் செய்து பாட வைத்து விடுவார். “குருவி தலையில் பனங்காயை வைக்க மாட்டேன்” என பல முறை சொல்லி இருக்கிறார். ( பெரும்பாலும் பனங்காயை டி.எம்.எஸ், பி.சுசீலாவின் தலையிலேயே ஏற்றி வைத்தது தனிக்கதை ).
         1956-ல் விஸ்வநாதன்- ராமமூர்த்தி இசையில் பாச வலை என்ற தமிழ் படத்திலும், சந்தோஷம், தெனாலி ராமகிருஷ்ணா, பக்த மார்கண்டேயா போன்ற தெலுங்கு படங்களிலும் பி.சுசீலா பாடினார்.  பக்த மார்கண்டேயா, தெனாலி ராமகிருஷ்ணா படங்கள் அதே பெயரில் தமிழிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டது. தெனாலி ராமகிருஷ்ணா படத்தில் இடம் பெற்ற “சந்தன சர்ச்சித நீல” என ஜெயதேவ அஷ்டபதி மிகவும் பிரபலமான பாடலாகும்.. இப்போதும் ஆந்திராவில் இப்பாடல் அடிக்கடி ஒலிக்கிறது. இந்த தலைமுறையினரும் இப்பாடலை மேடைகளில் அடிக்கடி பாடுவதை கேட்கலாம். ரீதிகௌளை  ராகத்தில் அமைந்த முதல் சினிமா பாடல்  "சின்னக்கண்ணன் அழைக்கிறான்" (கவிக்குயில்) என இணையத்தில் பலரும் தவறான தகவல்களை பதிவு செய்ததை பார்த்திருக்கிறேன். அனால் 1956-லேயே "தெனாலி ராமகிருஷ்ணா" படத்தில் இதே ராகத்தில்  எம்.எஸ்.வி அவர்கள்,  “தென்னவன் தாய்நாட்டு சிங்காரமே” பாடலை பி.சுசீலாவை வைத்து பாட வைத்து விட்டார் என்பது பலருக்கும் தெரியாது. ( எனக்கு இந்த தகவலை அளித்த நண்பர் ஸ்ரீராம் லக்ஷ்மன் அவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி ). 1956-ல் .வெளிவந்த  பாசவலை படத்தில் இடம் பெற்ற “சின்னப்பொண்ணு சிங்காரி நான்”, “மதிப்பு கேட்ட மாமா”, போன்ற பாடல்களும் குறிப்பிட படத்தக்கவை. பக்த மார்க்கண்டேயா தெலுங்கு படத்தில் எட்டு பாடல்களை பாடும் வாய்ப்பினை பி.சுசீலாவுக்கு அளித்தனர். தமிழிலும் அப்பாடல்களை பி.சுசீலா பாடினார்.


                           


               
                             
                



           
   
                1957-ம் வருடத்தில் புதையல், மகாதேவி, பத்தினி தெய்வம் என மூன்று படங்களில் பாடும் வாய்ப்பளித்தார். புதையல் படத்தில் பி.சுசீலா பாடிய ஐந்து பாடல்களுமே அவற்றின் திறமைக்கு சவாலானவை. சி.எஸ்.ஜெயராமின் கனமான குரலுக்கு ஈடு கொடுக்கும் “விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே” பாடல் ஒரு சூப்பர் ஹிட் பாடலாகியது, காலங்கள் பல கடந்தாலும் இப்போதும் மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறது. நெசவாளர் வாழ்வோடு பிணைந்த, ஒரு கிராமியப்பாடலாய் ஒலித்த “சின்ன சின்ன இழை பின்னி பின்னி வரும்” பாடல்  இன்னொரு அருமையான பாடல் ஆகும். அடுக்கடுக்காய் விழும் வார்த்தைகள், நீளமான வாக்கியம் என பாடுவதற்கு சிரமமான பாடல் என்றாலும் பி.சுசீலா அதை அருமையாய் பாடி இருப்பார்.. “ஆசைக்காதலை மறந்து போ” என சோகம் ததும்பும் ஒரு பாடலும் படத்தில் இடம் பெற்றது.. இளமை பொங்க , தோழிகளுடன் பாடும்  ”தங்க மோகன தாமரையே” என்ற பாடல் இன்னொரு அருமையான பாடல் ஆகும். எல்லா பாடல்களுமே நல்ல தரமான பாடல்கள் மற்றும்  பாடுவதற்கு சிரமமான பாடல்கள் ஆகும். பத்தினி தெய்வம் படத்தில் டி.எம்.எஸ் அவர்களுடன் இணைந்து “மோகன புன்னகை ஏனோ”, “கசக்குமா இல்லை இனிக்குமா” என இரு முத்தான பாடல்களை பாடினார் பி.சுசீலா அவர்கள்.. மகாதேவி படத்தில் ஏ.எம்.ராஜாவுடன் இணைந்து பாடிய “கண் மூடும் வேளையிலும்” ஒரு சூப்பர்-ஹிட் டூயட் ஆகியது. அதே படம் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டது. அதில் ஆறு பாடல்களை பாடினார் பி.சுசீலா. “khaki khaki katu kathe” ( காக்கா காக்கா மைகொண்டா), Kamuka jathiki” (காமுகர் நெஞ்சில் நீதியில்லை), kanu mooyi vellalo” (கண் மூடும் வேளையிலும்), seva Cheyuthe” (சேவை செய்வதே ஆனந்தம்), Singaramula ninne (சிங்கார புன்னகை கண்ணாலே), Swathanthira (சுதந்திர தாகம் கொண்ட) என எல்லாமே நல்ல பாடல்கள்.


    
                     

     
     

         
    
   1958-ல் பதிபக்தி, மாலை இட்ட மங்கை, பெற்ற மகனை விற்ற அன்னை, தங்கப்பதுமை போன்ற படங்களில் வாய்ப்பு அளித்தார்கள்.  பதிபக்தியில்  இடம் பெற்ற “சின்னஞ்சிறு கண்மலர், செம்பவழ வாய்மலர்” பாடல் எவர்க்ரீன் ஹிட். சிறப்பான இசை, பி.சுசீலாவின் ஆழமான குரல், சாவித்ரியின் உணர்வுபூர்வமான நடிப்பு சேர்ந்து என எல்லாம் இப்பாடலை காலத்தை வென்ற பாடல் ஆக்கியது. பதி பக்தி படத்தில் “இரை  போடும் மனிதருக்கே இரையாகும் வெள்ளாடே” என்ற பட்டுக்கோட்டையாரின் தத்துவப்பாடலும் பிரபலமாகிய  பாடலாகும். கோபமா என்மேல் கோபமா என இன்னொரு அழகிய   டூயட்டும் இடம் பெற்றது. பதிபக்தி படம் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு, அதன் பாடல்களையும் பி.சுசீலாவே பாடினார். மாலை இட்ட மங்கை படத்தில் “இல்லறம் ஒன்றே நல்லறம் என்றிவர்” என்ற பெண்மையின் துயர் தொனிக்கும் பாடலையும், “அன்னம் போல பெண்ணிருக்கு” என்ற  சந்தோஷமான பாடலையும் பாடும் வாய்ப்பை பி.சுசீலாவுக்கு அளித்தார்கள். பெற்ற மகனை விற்ற அன்னை படத்தில் “தென்றல்  உறங்கிய போதும்” பாடல் மெலடியின் உச்சம் எனலாம். ஏ.எம்.ராஜாவும், சுசீலாவும் குழைந்து குழைந்து பாடி இருக்கும் ஒரு சூப்பர் ஹிட் பாடல் அது. தங்கப்பதுமை படத்தில் “என் வாழ்வில் புதுப்பாதை கண்டேன்” என சந்தோஷமாகவும், சோகமாகவும் ஒரு இனிமையான பாடல். ஒரு முறையாவது கேட்க வேண்டிய ஒரு ஹம்மிங் இந்த பாட்டிலேயே இருக்கிறது.


    
                     





     



   


         
    
                 1959-ல் அமுதவல்லி, பாகப்பிரிவினை, ராஜா மலயசிம்மன், சிவகங்கை சீமை, தலை கொடுத்தான் தம்பி என பல படங்களில் பாடும் வாய்ப்பு அளித்தார்கள். அமுதவல்லியில் டி.ஆர்.மகாலிங்கம் அவர்களுடன் பாடிய “ஆடை கட்டி வந்த நிலவோ” மிகவும் பிரபலமான பாடல். டி.ஆர்.மகாலிங்கம் அவர்களுடன் இணைந்து பாடிய  “காலம் எனுமொரு ஆழக்கடலினில்” இன்னொரு இனிமையான டூயட். அது பி.சுசீலாவின் குரலில் சோகப்பாடலாகவும்  “காலம் எனுமொரு ஆழக்கடலினில்” படத்தில் இடம் பெற்றது. பி.சுசீலாவும் எல்.ஆர்.ஈஸ்வரியும் இணைந்து பாடிய  “கண்கள் ரெண்டும் வண்டு நிறம்” என ஒரு இனிமையான பாடலும் இடம் பெற்றது. பாகப்பிரிவினையில் “தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்” மறக்கவே முடியாத பாடல். காலத்தை வென்ற வரிகளும், இசையும், குரலும் பாடலை இப்போது கேட்டாலும் இனிக்க வைக்கிறது.  இப்படத்தில் வரும் “தாழையாம் பூ முடிச்சு” பாடலை டி,எம்,எஸ் அவர்களும் பி.லீலா அவர்களும் இணைந்து பாடி இருப்பார்கள். இப்படத்தின் தெலுங்கு வடிவமான Muddu banti poolu petti” (Telugu) மற்றும் கன்னட வடிவமான  Kedige Hoo mudithu ( kannada - Muriyatha mane) பாடல்களை பி.சுசீலா பாடினார். ராஜா மலயசிம்மன் படத்திலும் வித்தியாசமான நான்கு பாடல்கள். பி.பி.எஸ் மற்றும் பி.சுசீலா இணைந்து பாடிய “அழகே அமுதே” என்ற  இனிமையான மெல்லிய டூயட் ஆகட்டும் “வெண்ணிலவே நில்லு உன் எண்ணம் என்ன சொல்லு” என அருமையான ஒரு நிலாப்பாடல் ஆகட்டும்  “கண்ணுக்கு கண்ணான காட்சி” ஒரு செமி-கிளாசிகல் பாடல் ஆகட்டும்  “குண்டூசி கண்கள்” என்ற வெஸ்டேர்ன் இசை பாடலாக இருக்கட்டும், எல்லாமே மிக தரமாக இருக்கும். (“குண்டூசி கண்கள்”   பாடலின் தெலுங்கு வடிவம்: “Andamulanni neeke”). இதன் இடையில் ஒரு “Opera” bit கூட போட்டு அசத்தி இருப்பார். (தகவல் தந்த ஸ்ரீராம் லக்ஷ்மணுக்கு  இன்னொரு நன்றி ) அது பி.சுசீலாவின் குரலில் அழகாய் ஒலிக்கும். மறக்காமல் கேளுங்கள். தலை கொடுத்தான் தம்பி படத்தில் “துள்ளி துள்ளி அலைகள் எல்லாம்” என்ற பாடலும் மறக்க முடியாத ஜோடிப்பாடல் ஆகும் . சிவகங்கை சீமை படமே ஒரு உணர்வுபூர்வமான படம். அதில் எம்.என்.ராஜத்துக்காக “மேகம் கவிந்ததம்மா” என நெஞ்சை உருக்கும் ஒரு பாடலை பாடி இருக்கிறார். 

     
     
     

    

                     

     

     


       
    

            ஐம்பதுகளில் நிறைய வகையான இசை, இசை அமைப்பாளர்கள், கவிஞர்கள், பாடகிகள் என இருந்த திரை இசை உலகம், The Best” என சிலரை தேர்ந்தெடுத்து அவர்களுடன் அறுபதுக்குள காலடி எடுத்து வைத்தது. விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி.மகாதேவன், கண்ணதாசன், டி.எம்.எஸ் மற்றும் பி.சுசீலா என்போரே அந்த மேதைகள். அறுபது முதல் மெல்லிசையின் பொற்காலம்  ஆரம்பம் ஆயிற்று ...!!

ஐம்பதுகளில் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையில் பி.சுசீலா பாடிய பாடல்களின் தொகுப்பு கீழே .. ( From 1952-1959)
YearLanguageMovieSongs
1952Tamilchandiranimaanilam pugazh
1952Teluguchandiraniswadesaaniki
1956Tamilpaasa valaichinnapponnu singaari 
1956Tamilpaasa valaimadhippu ketta maamaa
1956TeluguSantoshamchinnari dhanara ninnelu 
1956TeluguSantoshamrupaayi kasulone unnadi
1956Telugusantoshamteeyani eenati reyi
1956Telugusantoshamunnarunnaru
1956Telugutenali ramakrishnachandana charchitha
1956Telugubaktha markandeyanelakoyilaa tee teeyaga
1956Telugubaktha markandeyaninnu sevimpa
1956Telugubaktha markandeyapremakrithivo
1956Telugubaktha markandeyatherachi choodu kannu
1956Telugubhakta markandeyaaagumaagu
1956Telugubhakta markandeyapannagabharana bhavana
1956Telugubhakta markandeyathandri shivuni gundaleku
1956Telugubhakta markandeyavinandi meeru
1957Tamilbhaktha markandeyaoru mankuyil
1957Tamilmahadevikann moodum vElayilum
1957Tamilmahadevisudhanthira thagam konda
1957Tamilpathini deivammohana punnagai eno
1957Tamilpathini deivamvedantham pesuvanga
1957Tamilpathini deivamkasakkuma illai inikkuma
1957Tamilpudhayalaasaikaadhalai maranthu pO
1957Tamilpudhayalchinna chinna izhai pinni 
1957Tamilpudhayalthanga mOhana thaamarayE
1957TamilpudhayalvinnOdum mughilOdum
1957Telugumaha devikhaki khaki katu kathe
1957Telugumaha devikaamuka jathiki
1957Telugumaha devikanu muuyi vellalu
1957Telugumaha deviseva cheyute
1957Telugumaha devisingaramula ninne
1958Tamilkudumba gowravamthennavan thai naatu
1958Tamilmaalai itta mangaiannam pola pennirukku
1958Tamilmaalai itta mangaiillaram ontre nallaram
1958Tamilpathi bhakthichinnanchiru kanmalar
1958Tamilpathi bhakthiirai podum manitharukke
1958Tamilpathi bhakthikObama en mel kObama
1958Tamilpathi bhakthiomkaara roopini aangara
1958Tamilpetra maganai vitra anthendral urangiya pOdhum
1958Tamilthanga padhumaien vazhvil pudhu paadahi
1958Tamilthanga padumaien vazhvil pudhu-sad 
1959Tamilamudhavalliaadai katti vantha nilavO
1959Tamilamudhavallikaaalam enumoru(sad)
1959Tamilamudhavallikaalam enumoru aazha
1959Tamilamudhavallikanngal rendum vandu
1959Tamilbaaga pirivinaithangathile oru kurai
1959Tamilraja malayasimmhangundoosi kangal
1959Tamilraja malayasimmhankannukku kannana
1959Tamilraja malayasimmhanazhage amudhe
1959Tamilraja malayasimmhanvennilave nillu
1959Tamilsivagangai seemaiIamyum vizhiyum edhir
1959Tamilthalai koduthan thambithulli thulli alagalellam 
1959Telugupathi bhakthiambikave thalli
1959Telugupathi bhakthichinni chinni kannula
1959Telugupathi bhakthikopama
1959Teluguraja malaya simhaandamulanni neeke
1959Teluguraja malaya simhasangeetha sahitya leela
1959Teluguraja malaya simhavennelane hayi valapinche
1959Teluguraja malaya simhaaase virise

தொடரும் ................

( Part 2 ) (Part3 ) ( Part4 )


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக