பின்பற்றுபவர்கள்

திங்கள், 20 ஜூலை, 2015

M.S.விஸ்வநாதன் இசையில் பி.சுசீலா பாடிய பாடல்கள் - Part2

                  1960, 1961. 1962 -ல் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் பி.சுசீலா பாடிய பாடல்களின்  தொகுப்பு.. 


         
                         தென்னிந்திய இசையின் பொற்காலம் என போற்றப்படுவது அறுபதுகளின் இசையே !.. தமிழை பொருத்த வரை  தமிழில் தலை சிறந்த  கலைஞர்கள் ஆன எம்.எஸ்.வி ,  கே.வி.மகாதேவன் அவர்களின் இசை ராஜ்ஜியமும்,   கண்ணதாசன், வாலியின் பாடல்களும், டி.எம்.எஸ், பி.சுசீலாவின்  குரல்களும் ஒன்றிணைந்து,  "The Best" இசையை மக்களுக்கு அள்ளி அள்ளி வழங்கினார்கள். இன்றளவும் அதற்கு இணையான பாடல்கள் வரவில்லை என்பதே உண்மை.
                                 
            இனி   1960-இல் MSV-TKR இசையில் பி.சுசீலா பாடிய பாடல்களை பார்க்கலாம். 1960-ல் வெளிவந்த பாசமலர் படம் தமிழ் திரை இசை உலகில் பெரிய திருப்புமுனை படமாகும்.  நடிப்பு, கதை, அண்ணன் தங்கை பாசம், இசை, பாடல்கள் என எல்லாமே மக்களை கவர்ந்தான. படமும்  வெள்ளிவிழா படமாகியது. இப்படம் பலமுறை ரி-ரிலீஸ் செய்யப்பட்ட போதும் நல்ல வசூலை குவித்தது. இப்படத்தின் பாடல்கள் எல்லாமே காலத்தை கடந்து நின்றன.. பி.சுசீலாவுக்கு இப்படத்தில் நான்கு பாடல்கள் பாடும் வாய்ப்பு கிடைத்தது. அனைத்தும் முத்துக்கள்!!. டி.எம்.எஸ் அவர்களுடன் பாடிய "மலர்ந்தும் மலராத" பாடல் தான் படத்தின் ஹைலைட் எனலாம். படத்தின் மொத்த கதையையும்  அப்பாடலிலேயே  சொல்லி விடுவார்கள். டி.எம்.எஸ்சும் பி.சுசீலாவும், கதாபாத்திரங்களாகவே மாறி  உருகி உருகி பாடி இருப்பார்கள். பி.சுசீலாவின் விசும்பல் ஒன்று போதுமே .. !!  இன்றளவும் இதற்கு இணையான ஒரு அண்ணன் தங்கை பாசத்தை சொல்லும் பாடல் வரவில்லை. உழைக்கும் மக்களின் உற்சாகத்தை எதிரொலிக்கும் "எங்களுக்கும் காலம் வரும்" இன்னொரு மறக்க முடியாத பாடல். பி.பி.எஸ்., பி.சுசீலா குரலில் ஒலிக்கும்  "யார் யார் யார் அவள் யாரோ"  இன்னொரு மென்மையான காதல் பாடல். வார்த்தைகளும் , குரல்களும் , இசையும் ஒன்றோடொன்று பின்னி பிணைந்து ஒலிப்பதை கேட்பது எத்தனை சுகம்!. சாவித்ரி பாடும், "மயங்குகிறாள் ஒரு மாது" என்ற பாடல் கேட்பதற்கு இன்னொரு சுகமான பாடல். எக்ஸ்ப்ரஷன் என்ற பெயரில் விரசமாய் பாடும் பாடகர்கள் மத்தியில், ஒரு முதல் இரவுப்பாடலை கூட எத்தனை  நேர்த்தியாய் அதன் அழகு கெடாமல் பாடி இருக்கிறார் பி.சுசீலா. காதாநாயகியாய் அறிமுகமாகி பத்து வருடங்களுக்கு பிறகும் கூட சாவித்திரியின் ஆளுமை இப்படத்தில் தெளிவாக தெரியும். என்ன ஒரு நடிப்பு !! இப்படம் தெலுங்கில் "Raktha sambandam" என்ற பெயரில் 1962-ல் கண்டசாலா இசையில் வெளியானது. என்.டி.ஆர், சாவித்திரி ஜோடியாக நடித்தனர். இப்படத்தில் மலர்ந்தும் மலராத ( Chandruniminchu ), வாராய் என்  தோழி வாராயோ ( Bangaru bomma Ravamma) , " எங்களுக்கும் காலம் வரும்"(Manchu roju vastundi ) போன்ற பாடல்களின் இசை  அப்படியே உபயோகிக்க பட்டது. வாராய் என்  தோழி வாராயோ பாடலின் தெலுங்கு வடிவத்தையும் பி.சுசீலாவே பாடினார்.
                   1960-ல்  வெளிவந்த "மன்னாதி மன்னன்" திரைப்படம் இன்னொரு மியுசிகல் ஹிட். "கண்கள் இரண்டும் என்று உம்மைக்கண்டு பேசுமோ" பாடலை மறக்க முடியுமா? எவ்வளவு பிரபலம்  அந்த பாடல்!! அதைப்போலவே "கனிய கனிய மழலை பேசும் கண்மணி" பாடலும், காலத்தை வென்ற அற்புதமான மெலடி. பி.பி.எஸ், பி.சுசீலா, ஜமுனாராணி குரல்களில் ஒலித்த "நீயோ நானோ யார் நிலவே" பாடல் இன்னொரு பிரமாதமான  சோக பாடல்.  இதே வருடத்தில் வெளிவந்த  "ஓன்று பட்டால் உண்டு வாழ்வு" படத்தில், மூன்று பாடல்களை பாடினார் பி.சுசீலா அவர்கள். "சல சல ராகத்திலே" மற்றும் "துணிந்தால் துன்பம் இல்லை" பாடல்கள் குறிப்பிடபடத்தக்கவை. "ஆளுக்கொரு வீடு" படத்தில் "அன்பு மனம் கனிந்த பின்னே" ஒரு சூப்பர் மெலடி. கவலை இல்லாத மனிதன் படத்தில் "சிரிக்க சொன்னார் சிரித்தேன்" குறிப்பிடத்தக்க பாடல். இவை தவிர "ரத்னகிரி இளவரசி" படத்தில்  நான்கு பாடல்களை பாடினார்.


     
     

     
    
    
                     

     
   
           
   
     
                    1961-ல் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையில் பாலும் பழமும், பாக்யலக்ஷ்மி, பாவ மன்னிப்பு, மணப்பந்தல்  போன்ற தமிழ் படங்களிலும்,  VijayanagaradaVeeraputra என்ற கன்னட படத்திலும், Intiki deepam illalu என்ற தெலுங்கு படத்திலும்  பாடினார் பி.சுசீலா அவர்கள்.
                     பாவ மன்னிப்பு படத்தில் பி.சுசீலா பாடிய இரண்டு பாடல்களுமே முத்துக்கள். இரண்டுமே காலம் கடந்தும் மக்கள் மனதை விட்டு நீங்காத பாடல்கள் தான். "அத்தான் என்னத்தான்" பாடல் வரிகளே புதுமையான வகையில் "தான்" "தான்" என முடியும் வகையில் எழுதப்பட்டது.  பாடுவதற்கு கொஞ்சம் சிக்கலான வார்த்தைகள் தான் என்றாலும் பி.சுசீலா அந்த  பாடலுக்கு முழு உயிர் கொடுத்தார். இப்படி ஒரு பாடல் கிடைத்தால் நான் சென்னைக்கு வந்து பாடுவேன் என புகழ்ந்தார் லதா மங்கேஷ்கர். அதே போல் பி.சுசீலாவும், எம்.எஸ்.வியும் பி. இணைந்து பாடிய "பாலிருக்கும் பழமிருக்கும்" பாடல் இனிமையின் இலக்கணம். நிலா ராத்திரியில் இப்பாடலை கேட்டுப்பாருங்கள்.  செவியும், மனதும் நிறைந்து போகும். கண்ணதாசன், எம்.எஸ்.வி-ராமமூர்த்தி, பி.சுசீலா மூவரின் மகுடத்தில் வைரம் இப்பாடல்கள். இப்படம் "Paapa Pariharam" என்ற பெயரில் தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்பட்டு அதையும் பி.சுசீலாவே பாடினார். பாலிருக்கும் பழமிருக்கும்  பாடலின் தெலுங்கு வடிவமான "Mee Hrudayam  Premalayam" என்ற பாடலில் பி.சுசீலாவுடன் humming பாடியவர் அவரின் சகோதரரும்,  பாடகருமான மறைந்த "திரு.ராமச்சந்திரா"  அவர்கள்.

                     பாலும் பழமும் படத்தில் பி.சுசீலாவை ஏழு பாடல்கள் பாட  வைத்து ஹிட் மேல் ஹிட் கொடுத்தனர்  மெல்லிசை மன்னர்கள். "ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்" பாடலை கேட்காத தமிழர்கள் இருப்பார்களா என்பது  சந்தேகமே.  இப்போதும் கூட ரியாலிட்டி ஷோக்களில் பாடப்படும் அளவுக்கு எப்போதுமே பிரபலமான பாடல் அது. வட இந்திய இசைக்குயில் லதா மங்கேஷ்கர் மற்றும் ஜேசுதாஸ் என பலரும் இப்பாடலை புகழ்ந்து பேசுவதை கேட்டிருக்கிறோம். மெல்லிசை மன்னரின் இசை ராஜ்ஜியம்   முழுக்க முழுக்க வியாபித்திருக்கும் இப்பாடலை அற்புதமான பாடல் என சொன்னால் அது கூட கொஞ்சம் குறைவு தான்!. சந்தோஷமாகவும், சோகமாகவும் பாடும்  "நான் பேச நினைப்பதெல்லாம்" பாடல் இன்னொரு மைல்கல். டி.எம்.எஸ், பி.சுசீலா இணைந்து பாடிய இப்பாடல்.  எந்த தலைமுறையையும் ஈர்க்கும். மெல்லிசையை நெய்து, பட்டு  விரிப்பாய் கொடுத்திருப்பார்கள் மெல்லிசை மன்னர்கள். டி.எம்.எஸ் , பி.சுசீலா பாடிய "என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்" பாடல் சோகப்பாடல் என்றாலும், நீரோடை போல்  ஒழுகிச்செல்லும் அழகு அந்த பாடலில் இருக்கும்.   "காதல் சிறகை காற்றினில் விரித்து" பாடலின் ஆலாப் பற்றி வைரமுத்து அவரின் புத்தகத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். இப்பாடலை பி.சுசீலா தவிர வேறு யாராலும் அதே அழுத்ததுடன் பாட முடியாது என்றே சொல்லலாம். பாடுவதற்கு கொஞ்சம் சிரமமான பாடல் இது என்றால், "இந்த நாடகம் அந்த மேடையில்" பாடல் ரொம்ப ரொம்ப சிரமமான பாடல். இதற்கு முன் இவ்வளவு அழுத்தமான சோகப்பாடல் ஒரு பெண் குரலில் வந்திருக்கவில்லை என்பேன். "அம்மம்மா..ஆ... அம்மா..ஆ.." என குரலில் தொனிப்பது வேண்டுதலா? இயலாமையா?, ஆற்றாமையா?  !!  அடிவயிற்றில் இருந்து எழும் அந்த ஓலம் எல்லா உணர்வுகளையுமே பிரதிபலிக்கும். இந்த பாடலை இது வரை யாரும் கையாண்டு நான் பார்த்ததில்லை. சுசீலாம்மாவால் மட்டுமே இத்தனை அழுத்தத்துடனும், வலியுடனும் பாட முடியும் இந்த பாடலை.. "தென்றல் வரும் சேதிவரும்" என ஒரு இளமையான பாடல் ரிக்கார்டில் இருக்கிறது. படத்தில் இடம் பெறவில்லை.  இத்திரைப்படம் தெலுங்கில் "Prayaschittam" என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டது. தெலுங்கில் எல்லா பாடல்களையும் பி.சுசீலாவும், கண்டசாலாவும் பாடினர்.


     
     

   
    
    
                     

     

               அதே வருடத்தில் தான் "பாக்யலக்ஷ்மி" படமும் வெளிவந்தது. இப்படத்தின் பாடல்கள் பி.சுசீலாவின் குரல் வளத்தை மற்றும் பாடும் திறமையை இன்னொரு படி மேலே ஏற்றிய பாடல்கள் என்றால் மிகை இல்லை..  சௌகார் நடிப்பில், இளம் விதவையின் விரகதாபம் தொனிக்கும் பாடலாக "மாலைப்பொழுதின் மயக்கத்திலே" பாடல் அமைந்தது. பி.சுசீலாவின் திரை இசை வாழ்வில்   இப்பாடல் இன்னொரு மைல்கல்.  இன்றளவும் அவரின் சிறப்பான பாடல்களில் ஒன்றாக இப்பாடல் பிரபலம் ஆகி இருக்கிறது.  விரகப்பாடலாக ஒலிக்கும் இப்பாடல் இன்னொரு சூழ்நிலையில் சோகப்பாடலாகவும் ஒலிக்கிறது.  இரண்டுமே அருமை. ! விரகம் ததும்பும் பாடல்களை கம்போஸ் செய்யும் போது, எல்லா நெடில் எழுத்துக்களுக்கும் கொஞ்சம் அதிகமான அழுத்தம் கொடுத்து பாட வைக்கும் யுக்தியை இப்பட பாடலில் இருந்தே அறிமுகம் செய்து வைத்திருக்கிறார் மெல்லிசை மன்னர். மாலைப்பொழுதின் மயக்கத்திலே, பால்போலவே போல பல பாடல்களில் இந்த யுக்தியை உபயோகித்து இருக்கிறார். இப்படி செய்யும் போது அதை தாளகட்டுக்குள் கொண்டு வருவது மிக சிரமம். அதை அழகாக செய்திருக்கிறார்கள் மெல்லிசை மன்னர்கள்.   இந்த பாடல் தன்னை பாதித்ததாக பலமுறை கூறி இருக்கிறார் இளையராஜா.
                        அதே போல் "காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே" பாடலும் குறிப்பிடத்தக்க பாடல். காதல் கிடைத்த சந்தோஷத்தில் ஒருத்தி மனசு மகிழ்கிறது!.. தன் கணவன் தான் அந்த பெண்ணின் காதலன் என தெரிந்தும் ஒன்றும் செய்ய இயலாத நிலையில் இன்னொருத்தி  மனது அழுகிறது!.  இருவரின் உணர்வும் ஒரே பாடலில்,  "நினைத்து நினைத்து சொல்ல வந்த சேதிகள் என்ன,, உன் நிலைமை மாறி நின்று விட்ட வேதனை என்ன?" என்ற வரிகளில்  இருவர் உணர்வும் வெளிப்படுகிறது. இப்படி எழுத கண்ணதாசனால் மட்டுமே முடியும். பாடவும் சுசீலாவால் மட்டுமே முடியும். இப்படி இசை அமைக்கவும் மெல்லிசை மன்னர்களை  விட்டால் வேறு யார்?
              சௌகார் தன் குழந்தையை ஆறுதல் படுத்த "கண்ணே ராஜா கவலை வேண்டாம் அப்பா வருவார் தூங்கு" என்ற சோகத்தாலாட்டை கேட்கும் போது கேட்பவர் மனது கரையும்.  கணவனை விட்டு பிரிந்தோ, அல்லது தூரமாகவோ இருக்கும் எத்தனை  தாய்மார்களின் வலிக்கு மருந்தாக அமைந்ததோ இப்பாடல் ?! ஈ.வி.சரோஜாவுக்காக பாடிய "காதல் எனும் வடிவம் கண்டேன்" பாடல், அற்புதமான காதல் பாடல். காதலை அனுபவிக்கும் பெண்மனதின் சுகம் அந்த பாடலின் ஹம்மிங்-லேயே தெரியும். இவை தவிர ஏ.எல்.ராகவன், பி.சுசீலா பாடிய , "காதலென்றால் ஆணும் பெண்ணும்" என்ற குறும்பும், ஜாலியுமாய் ஒரு இனிமையான ஜோடிப்பாடல் ரசிக்கத்தக்கது. தொகையறா போல் ஒலிக்கும் "என்னை நான் அறியாத சின்ன வயதில்" .என்ற அதிகம் கேட்டிராத  பாடலும் தரமானது.
                       மணப்பந்தல் படத்தில் "உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம்  சொல்வேன்" பாடல் சந்தோஷமாகவும், சோகமாகவும் ஒலித்தது. ஓரளவு பிரபலமான பாடல். பி.பி.எஸ், பி.சுசீலா குரலில் "பார்த்து பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன்" , பி.சுசீலாவின் குரலில் ஒலித்த "ஒரே ராகம் ஒரே தாளம்" பாடல்களும் நல்ல பாடல்கள். இப்படம் "Intiki  deepam illalu" என்ற பெயரில் தெலுங்கிலும் ரீமேக்  செய்யப்பட்டு வெளிவந்தது. அப்பாடல்களையும் பி.சுசீலாவே பாடினார்.  Vijayanagara veeraputra" என்ற கன்னட படத்தில் "Madhura Mohana Veena" என ஒரு செமி-கிளாசிகல் பாடலை பாடினார் பி.சுசீலா அவர்கள்.

     
     

   
    
    
                     

     
 
                                 
       

       . 1962-லும் எம்.எஸ்.வியின் இசை பல சிகரங்களை தொட்டது.  ஆலயமணி. பாலே பாண்டியா, நெஞ்சில் ஓர் ஆலயம். பார்த்தால் பசி தீரும், படித்தால் மட்டும் போதுமா?, பந்தபாசம்,  நிச்சய தாம்பூலம்,  பாதகாணிக்கை, பார் மகளே பார், பாசம், காத்திருந்த கண்கள், செந்தாமரை, தென்றல் வீசும், வீர திருமகன் போன்ற தமிழ் படங்களிலும் , "Aasa Jeevulu" என்ற தெலுங்கு படத்திலும் மெல்லிசை மன்னர்கள் இசையில் பாடினார் பி.சுசீலா அவர்கள்.  எல்லா படங்களிலுமே பாடல்கள் ஹிட் , சூப்பர் ஹிட் வகை தான்,
                   ஆலயமணியில் "மானாட்டம் தங்க மயிலாட்டம்" என துள்ளிசை பாடலும், சீர்காழியாருடன் இணைந்து பாடிய "கண்ணான கண்ணுக்கு அவசரமா" என்ற  பாடலும் பிரபலம் ஆகின. எண்பதுகளில் ஒரு பத்திரிகையில் சீர்காழி அவர்கள் பி.சுசீலாவை பற்றி இப்படி குறிப்பிட்டார்.. இன்று "சமயபுரத்தாளே சாட்சி" படத்துக்காக சகோதரி பி.சுசீலாவுடன் ஒரு பாடலை   பதிவு செய்த பொது, அன்று "கண்ணான கண்ணனுக்கு அவசரமா" பாடிய அதே குரலை கேட்டேன். இப்படிப்பட்ட குரலை "தேவ அமுதம்" என்ற தானே கூற வேண்டும் என கூறினார்.
                    பலே பாண்டியா படத்தின் பாடல்கள் எல்லாமே ஹிட்.. "அத்தான் என்னத்தான்" பாடலில் "தான் தான்" என முடித்த கண்ணதாசன்  இப்படத்தில் "காய் காய்" என வரும் படி "அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே" என்ற  பாடலில் அவர் கவித்துவத்தை நிரூபித்தார். "உள்ளமெல்லாமிளகாயோ ஒவ்வொரு பேச்சுரைக்காயோ" என்ற வரியை கவனித்து கேளுங்கள். "உள்ளமெல்லாம் இளகாயோ, ஒவ்வொரு பேச்சு உரைக்காயோ" என எடுத்துக்கொள்வீர்களா? அல்லது "உள்ளமெல்லாம் மிளகாயோ, ஒவ்வொரு பேச்சு சுரைக்காயோ" என எடுத்துக்கொள்வீர்களா? அங்கே தான் நிற்கிறார் கவிஞர்.! பாடல் முழுக்க இப்படி கற்பனை பரவிக்கிடக்கும்.. காதலர்களின் செல்ல கோபம். சந்தோஷம் எல்லாமே இப்பாடலில் பிரதிபலிக்கும். டி.எம்.எஸ், பி.சுசீலா, பி.பி.எஸ், ஜமுனாராணி என நால்வருமே ரொம்ப அழகாய் பாடி இருப்பார்கள். "வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்" என்ற பாடல் எப்படிப்பட்ட கோழைக்கும் தைரியம் பிறக்கும். டி.எம்.எஸ், பி.சுசீலா பாடிய இப்பாடலும் பெரிய ஹிட். பி.சுசீலா தனித்துப்பாடிய "வாழ நினைத்தால் வாழலாம்" பாடலின் சுசீலாம்மாவின் குரல் பளிங்கு போல்  ஒலிக்கும்.
                 நெஞ்சில் ஒரு ஆலயம் மெல்லிசை மன்னர்களுக்கு பெரிய வெற்றியை தேடி தந்த படம். எல்லா பாடல்களுமே காலத்தை வென்ற பாடல்கள்.   பி.சுசீலா பாடிய "சொன்னது நீதானா" ( விளக்கமான உரை ). "முத்தான முத்தல்லவோ"( விளக்கமான உரை) , "என்ன நினத்து என்னை அழைத்தாயோ". பாடல்கள் பட்டி தொட்டி  எங்கும் பிரபலம் ஆகின. "துள்ளி வரும் மான்குட்டி" என்ற சோகப்பாடலும் பி.சுசீலாவின் குரலில் இடம் பெற்றது. நெஞ்சில் ஓர் ஆலயம் படம் தெலுங்கிலும் தயாரிக்கப்பட்டது. "Manase mandiram (1966)" என்ற பெயரில் சாவித்திரி, நாகேஸ்வரராவ் நடிப்பில் வெளி வந்தது. அதிலும் எல்லா பாடல்களையும் பி.சுசீலாவே பாடினார். சொன்னது நீதானா பாடல் "Annadi Neevena" என தெலுங்கிலும் பி.சுசீலாவின் குரலில் ஒலித்தது.
                     படித்தால் மட்டும் போதுமா படத்தில் வெண்ணிலாவின் குளிர்ச்சியோடு போட்டி போடும் வகையில்    "தண்ணிலவு தேனிறைக்க தாழை மரம் நீர் தெளிக்க" ( விளக்கமான உரை ) பாடல். பி.சுசீலாவின் குரலில் ஒலித்தது.   பாசம் படத்தில் பி.பி.எஸ்ஸுடன் இணைந்து பாடிய "பால்  வண்ணம் பருவம் கண்டு", தனிப்பாடலாக பாடிய "தேர் ஏது சிலை எது திருநாள் ஏது", "உறவு சொல்ல ஒருவரின்றி வாழ்பவன்" என எல்லா பாடல்களுமே அருமையான பாடல்கள்.


     
     
         
    
                     

     
   
           
   

   

                             பார்த்தால் பசி தீரும் படத்தில் "அன்று ஊமை பெண்ணல்லோ" பாடலில்  சாவித்திரிக்கு "அ, ஆ.. " சொல்லிக்கொடுக்கும் பொது  ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு ஓசை கொடுப்பார் பி.சுசீலா அவர்கள். "ஏ.." என கூறிக்கொண்டே ஜெமினி தொட செல்வார் .. இவர் "ஏய் .." என்று செல்ல கண்டிப்புடன் விலகுவார்..  "மணிப்புறாவும் மாடப்புரவும் மனசில் பேசிய பேச்சல்லோ" என ஏ.எல்.ராகவனும், பி.சுசீலாவும் பாடுவதை கேட்க அத்தனை இனிமையாக இருக்கும். "அன்று ஊமை பெண்ணல்லோ" பாடலின் இன்னொரு வடிவம் சோகப்பாடலாக ஒலிக்கும்   இப்படத்தின் இன்னொரு கதாநாயகி சரோஜாதேவிக்காக "யாருக்கு மாப்பிள்ளை யாரோ", "பார்த்தால் பசி தீரும்", "கொடி அசைந்ததும் காற்று வந்ததா" போன்ற பாடல்களை பாடி இருக்கிறார் பி.சுசீலா அவர்கள். டி.எம்.எஸ் பி.சுசீலா பாடிய "கொடி அசைந்ததும் காற்று வந்ததா" பாடலில் கோழியில் இருந்து முட்டை வந்ததா கதையையே பாடலாக வடித்திருப்பார் கண்ணதாசன். அப்பாடலில் என்னைக்கவர்ந்தது பி.சுசீலாவின் குரலுக்கு நடித்த சரோஜாதேவியின் எக்ஸ்ப்ரஷன் தான்..அப்படியே வாழ்ந்திருப்பார்.!!  அதைப்போல் "யாருக்கு மாப்பிள்ளை யாரோ" பாடலில் ஒரு துள்ளலும் சந்தோஷமும் பாடல் முழுதும் தொனிக்கும்.
                        பந்த பாசம் படத்தில் பி.பி.எஸ் , பி.சுசீலா பாடிய "இதழ் மொட்டு விரிந்திட" பாடல் ஒரு மென்மையான டூயட். பி.சுசீலாவும் எஸ்.ஜானகியும் இணைந்து பாடிய "என் கதை தான் உன் கதையும்" குறிப்பிடத்தக்க சோகப்பாடல்.  காத்திருந்த கண்கள் படத்தில் "காற்று வந்தால் தலை சாயும் நாணல்" என்றொரு இனிமையான காதல் பாடலும், "வா என்றது உருவம்" பாடலும் பிரபலம் ஆகின. ஆனால் "வளர்ந்த கலை மறந்து விட்டாள்" பாடல் எக்கால ரசிகர்களும் ரசிக்கும் ரசிக்கும் பாடல். தாம்பத்யத்தின் அழகு  என்றால் ஊடலும் கூடலும் தான் என இப்பாடல் உணர்த்தும்.  தென்றல் வீசும் படத்தில் , "ஆசையில் பிறப்பது துணிவு". " எல்லோரும் வாழ வேண்டும்", "மீட்டாத வீணை இது" போன்ற சிறப்பான பாடல்கள் இடம் பெற்றன. "மீட்டாத வீணை இது" பாடலின் இசை பின்னாளில் இளையராஜாவின் இசையில் "தண்ணீர் குடம் கொண்டு தனியாக போனேன்" ஆனது. செந்தாமரை படத்தில் "செந்தமிழ் சுவை", "பூவிருக்கு வண்டிருக்கு" போன்ற பாடல்கள் குரிப்பிடபடத்தக்கவை.
              வீர திருமகன் படத்தில் மிக அழகிய காதல் பாடலான "ரோஜா மலரே ராஜகுமாரி" பாடல் இடம் பெற்றது. எத்தனை காலங்கள் கடந்தாலும் இப்பாடல் எல்லோரையும் கவரும் என்று அறுதியிட்டு சொல்லலாம்.  தவிர "நீலப்பட்டாடை கட்டி", "அழகுக்கு அழகு, நிலவுக்கு நிலவு", "ஏற்றுக தீபம் போற்றுக தீபம்" என எல்லாமே சிறப்பான பாடல்கள். ஏற்றுக தீபம் போற்றுக தீபம்" பாடல் கார்த்திகை தீபம் விழாவுக்கான பாடல் ஆகும். இப்படம் தெலுங்கில் "Praja Sakthi" என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டது. அதிலும் எல்லா பாடல்களையும் பி.சுசீலா பாடினார்.
         நிச்சய தாம்பூலம் படத்தில் "மாலை சூடும் மணநாள்" என மங்களகரமான ஒரு பாடல். பெரும்பாலான திருமண விழாக்களில் ஒலித்த பாடல்.  "நெத்தியிலே ஒரு குங்குமபொட்டு " பாடலை  அழகோடு  பாடி இருப்பார் பி.சுசீலா அவர்கள். "பாடினார்  கவிஞர் பாடினார்", " நீ நடந்தால் என்ன" போல குறிப்பிட படத்தக்க பாடல்களும் படத்தில் இடம் பெற்றன. இப்படம் "Pelli thaamboolam" என்ற பெயரில் தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்பட்டு அதன் எல்லா பாடல்களையும் பி.சுசீலா பாடினார்.
        பாத காணிக்கை பட பாடல்கள் பி.சுசீலாவின் திறமைக்கு தீனி போட்ட பாடல்கள். "எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் தலைவன்" பாடல் உள்மனதின் துயரம் தொனிக்கும் பாடல். "காலங்கள் உள்ள வரை கன்னியர்கள் யார்க்கும் இந்த காதல் வர வேண்டாமடி" என காதல் தோல்வியின் மொத்த வேதனையையும் பாடலில் எழுதியிருப்பார் கண்ணதாசன். உணர்ந்து பாடியிருப்பார் பி.சுசீலா அவர்கள். ".  பி.சுசீலாவும் எல்.ஆர்.ஈஸ்வரியும் இணைந்து பாடிய "உனது மலர் கொடியிலே" , "சொன்னதெல்லாம் நடந்திடுமா" போன்ற பாடல்கள்  இன்னொரு குறிப்பிட படத்தக்க மெலடிகள். "அத்தை மகனே போய் வரவா" (விளக்கமான உரை) பாடலும் சூப்பர் ஹிட் பாடல். "காதல் என்பது எதுவரை" ஒரு ஜாலியான பாடல். இப்படதின் பாடல்கள் எல்லாமே சிறப்பான பாடலகள் என்றால் மிகை இல்லை.
        பார் மகளே பார் படம் இன்னொரு மியுசிகல் ஹிட். "நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே" பாடல் மிகவும் ரம்மியமான பாடல்.  "என்னை தொட்டு சென்றன கண்கள்" , "மதுரா நகரில் தமிழ் சங்கம்" பாடல்களும்   மனதை மயக்கும் ஜோடிப்பாடல்கள்.  பிறப்பிற்கு பாடல் கொடுத்த மெல்லிசை மன்னர்கள் இப்படத்தில் இறப்பிற்கும் பாடல் கொடுத்தார்கள். "பூச்சூடும் நேரத்திலே போய் விட்டாயே அம்மா" என தன் மகளை நினைத்து பாடும் பாடலாய், உயிரை உருக்கும் ஒரு பாடல் படத்தில் இடம் பெற்றது.


     
     

   
    
    
                     

     
   
           
       katru vathal thalai saayum
     
            1962-ல் வெளியான பெரும்பாலான படங்களில்  பி.சுசீலா பாடி இருந்தார். இசை அமைப்பாளர் யாராக இருந்தாலும் பி.சுசீலாவுக்கு வாய்ப்பளித்தார்கள்.. பெரும்பாலானவை ஹிட் பாடல்கள் என்பது இந்த தொகுப்பை பார்த்தாலே தெரியும்.  ஆனால் மூன்று படங்கள் பி.சுசீலாவின் பாடல்கள் இடம் பெறாமல்  வெளி வந்தன. சுமைதாங்கி, போலீஸ்காரன் மகள் மற்றும் கொஞ்சும் சலங்கை படங்கள் தான் அவை. கொஞ்சும் சலங்கை  படத்தில்  பி.சுசீலா  "கொஞ்சும் சலங்கை ஒலி கேட்டு" , "வசந்த கால தென்றலில்"  என இரண்டு பாடல்கள் பாடி இருந்தாலும் படத்தில் இடம் பெறவில்லை. "கொஞ்சும் சலங்கை ஒலி கேட்டு" பாடல் கூட பி.லீலாவின் குரலில் தான் படத்தில் ஒலித்தது. எம்.எஸ்.வி இசையில் வெளிவந்த போலீஸ்காரன் மகள், சுமைதாங்கி படங்களில் கூட பி.சுசீலா பாடவில்லை. "போலீஸ்காரன் மகள்" தெலுங்கில் "Constable Kuturu" என்ற பெயரில் தயாரிக்க பட்டது. அதில் ஐந்து பாடல்களை பி.சுசீலா பாடினார்.  Poovu vale vira booya vale (பொன்னென்பேன் சிறு பூவென்பேன்),  chigurakula ooyalalo - Happy , sad, ( இந்த மன்றத்தில் ஓடி வரும்), vagala cupululela vecitiandham kosam kannulu என சிறப்பான பாடல்கள் கிடைத்தன. தமிழில் இப்படங்களில் பாடாததற்க்கு ஒரு காரணம் இருந்தது.. அது என்ன ....!!!?

(தொடரும் ...)..



1960. 1961, 1962 -ல்  MSV-TKR இசையில் பி.சுசீலா பாடிய பாடல்களின் தொகுப்பு ..
YearLanguageMovieSongs
1960Tamilaalukuoru Veeduanbu manam kanindha 
1960Teluguiddaru kodukulu (D)pacha cheera jeerada
1960Teluguiddaru kodukulu (D)talachi talachi chende
1960Tamilkavalai illatha manithansirikka sonnar sirithan 
1960Tamilmannadhi mannankangal irandum entru unnai 
1960Tamilmannadhi mannankaniya kaniya mazhalai pesum
1960Tamilmannadhi mannanneeyo naano yaar nilave
1960Tamilontru pattal undu vazhvuenga vazhkayile ulla
1960Tamilontru pattal undu vazhvusala sala raagathile
1960Tamilontru pattal undu vazhvuthuninthal thunbamillai
1960TamilpaasamalarEngalukkum kaalm varum
1960TamilpaasamalarMalarnthum malaradha
1960TamilpaasamalarMayangukiral oru maadhu
1960TamilpaasamalarYaar Yaar aaval Yaaro
1960Tamilrathnagiri ilavarasiAdu mayile nee Adumayile
1960Tamilrathnagiri ilavarasiAnbu thirumaniye ahamalare
1960Tamilrathnagiri ilavarasiengE unmai ena naadE
1960Tamilrathnagiri ilavarasiputham saranam kachami
1961Tamilbhaagyalakshmikaadhal entral aanum pennum
1961Tamilbhaagyalakshmikaadhal enum vadivam kanden
1961Tamilbhaagyalakshmikalloori ranigal
1961TamilbhaagyalakshmiEnnai naan ariyatha chinna
1961Tamilbhaagyalakshmikanne raja kavalai vendam
1961Tamilbhaagyalakshmimaalai pozhuthin mayakkathile
1961Tamilbhaagyalakshmimaalai pozhuthin -ver2
1961Tamilbhaagyalakshmikaana vantha kaatchi enna
1961Teluguiddaru kodukulu (D)kaana ella murichene
1961Teluguiddaru kodukulu (D)ontari pillanu
1961Teluguiddaru kodukulu (D)paata oka paata
1961Teluguiddaru kodukulu (D)preminchina priyuni
1961Teluguintiki deepam ellaluOke raagam (pathos)
1961Teluguintiki deepam ellaluOke raagam
1961Teluguintiki deepam ellaluVinumu cheli thelipedhane
1961Teluguintiki deepam ellaluNeeve neeve kavalasinadhi
1961Teluguintiki deepam ellaluvinumu cheli -sad
1961Tamilmanapanthalore raagam ore thaalam
1961Tamilmanapanthalpaarthu paarthu ninRathilE
1961Tamilmanapanthalunakku mattum (pathos)
1961Tamilmanapanthalunakku mattum (Happy)
1961Tamilpaalum pazhamumaalaya maniyin osayai
1961Tamilpaalum pazhamumennai yaarentru enni enni 
1961Tamilpaalum pazhamumintha naadagam antha medayil
1961Tamilpaalum pazhamumkaadhal siragai kaatrinil viridhu
1961Tamilpaalum pazhamumnaan pesa ninappathellam
1961Tamilpaalum pazhamumnaan pesa ninappathellam (sad)
1961Tamilpaalum pazhamumthendral varumsethi varum
1961Telugupaapa pariharammee hrudayam
1961TeluguPaapa ParikaramChiluka naa Chiluka
1961Tamilpaava mannippupaalirukkum pazhamirukkum
1961Tamilpaava mannippuathan ennathan avar 
1961Teluguprayaschittamnee pere naa pranam
1961Teluguprayaschittamaakasamantuna
1961Teluguprayaschittamnaati sowkiyame
1961Teluguprayaschittamnee pera naa pranam-sad
1978Teluguprayaschittamkanthala yethala
1961KannadaVijayanagarada Veeraputrmadhura mohana veena 
1962Tamilaalaya maniKannana kannanukku avasarama
1962Tamilaalaya maniMaanaattam thanga mayil
1962Teluguaasajeevuluaase jeevadharam
1962Teluguaasajeevuluellaru sukapadali
1962Teluguaasajeevuluokati deepamai velichinte
1962Tamilbandha paasamEn kadhai than un kadhayum
1962Tamilbandha paasamIthaz mottu virinthida
1962Tamilbhale pandiyaAthikkai kai kai alankai
1962Tamilbhale pandiyaVaazha ninaithal vaazhalam
1962Tamilbhale pandiyaVaazha ninaithal (solo)
1962Tamilkaathirundha kangalkaatru vandhal thalai saayum 
1962Tamilkaathirundha kangalvaa entradhu paruvam
1962Tamilkaathirundha kangalvalantha kalai maranthu 
1962Tamilnenjil or aalayamenna ninaidhu ennai 
1962Tamilnenjil or aalayammuthana muthallavo 
1962Tamilnenjil or aalayammuthana muthallavo (ver-2)
1962Tamilnenjil or aalayamsonnadhu nee dhaana
1962Tamilnenjil or aalayamthulli varum maankutti
1962Tamilnichaya thamboolammaalaisoodum mananaal
1962Tamilnichaya thamboolamnee nadanthal enna
1962Tamilnichaya thamboolamNethiyile Oru kunguma
1962Tamilnichaya thamboolampaadinar kavignar
1962Tamilpaadha kaanikkaiathai maganE pOi varavaa
1962Tamilpaadha kaanikkaiettadukku maaligayil
1962Tamilpaadha kaanikkaikaadhal enbadhu edhu varai
1962Tamilpaadha kaanikkaisonnadhellaam nadathidumaa
1962Tamilpaadha kaanikkaiUnadhu malar kodiyile 
1962Tamilpaar magale paarennai thottu sentrana
1962Tamilpaar magale paarNeerodum Vaigayile
1962Tamilpaar magale paarPoo choodum nErathile 
1962Tamilpaar magale paarthuyil kondal kanalgathu 
1962Tamilpaar magale paarMadura nagaril thamiz 
1962Tamilpaarthal pasi theerumpaarthal pasi thErum 
1962Tamilpaarthal pasi theerumyarukku maapillai yaaro
1962Tamilpaarthal pasi theerumantru oomai penn allo 
1962Tamilpaarthal pasi theerumantru oomai pennallo
1962Tamilpaarthal pasi theerumkodi asainthathum kaatru
1962Tamilpaasampaal vannam paruvam 
1962Tamilpaasamther yedhu silai yEdhi 
1962TamilpaasamUravu solla oruvarintri 
1962Tamilpadiththal mattum podhuthannilavu thEn iraikka
1962Telugupavitra prema (D)madhura mohalu
1962Telugupavitra prema (D)andhani prema
1962Telugupavitra prema (D)chakkani komali matalu
1962TeluguPelli thamboolamantham chinte
1962TeluguPelli thamboolamchal pada maja
1962TeluguPelli thamboolamprema nintine ille
1962TeluguPelli thamboolamye dari chanuno
1962Telugupraja sakthi(D)aakasa deepam baviki
1962Telugupraja sakthi(D)athi sogasaina amani
1962Telugupraja sakthi(D)lokamunele rajakumari
1962Telugupraja sakthi(D)neelala cheerakatti
1962Tamilsenthamaraipoovirukku vandirukku
1962Tamilsenthamaraisenthamizh suvai
1962Tamilthendral veesumAsaiyil piRappadhu thuNivu
1962Tamilthendral veesumellorum vazha vendum
1962Tamilthendral veesummeettaadha veeNai idhu 
1962Tamilthendral veesumpaadinaar kavinjar 
1962Tamilthendral veesumpaatu piRandhavudan
1962Tamilveera thirumaganyetruga depam pOtruka 
1962Tamilveera thirumaganazhagukku azhaku nilavukku
1962Tamilveera thirumaganneela pattadai katti
1962Tamilveera thirumaganrOjaa malare raajaa kumaari



( Part1 ) ( Part3 ) (Part4)

                           

1 கருத்து:

  1. சுசீலாம்மா பாடல்களில் பாவம் (bhavam) மிக தனித்தன்மை வாய்ந்தது என்று எல்லோருக்கும் தெரியும் .அவற்றில் "நாணம்" என்ற சொல்லுக்கு அவர் தரும் குழைவு அற்புதமானது.
    வெண்ணிற ஆடை படத்தில் வரும் பாடல் ஒன்றில் "அக்கம் பக்கம் யாரும் பார்த்தால் வெட்கம் வெட்கம்;
    அன்பே உன்னை நேரில் கண்டால் நாணம் நாணம் ...எனப் பாடும்போது அவரின் தனித்துவம் தெரியும்.

    பதிலளிநீக்கு