1960-ஆம் வருடம் வி.தட்சிணாமூர்த்தி அவர்கள் இசையில் சீதா என்ற படம் மூலமாக பி.சுசீலா மலையாளத்தில் அறிமுகமானார். அதில் வரும் “பாட்டுப்பாடி உறக்காம் ஞான்” என்ற தாலாட்டு பாடல் இன்றும் பிரபலம். பி,சுசீலாவுக்கு மலையாளம் மிக கஷ்டமாக இருந்தது. அதில் வரும் ர, ற எழுத்துகளின் உச்சரிப்புக்காய் மிகவும் சிரமப்பட்டார். அதுவும் “உறக்காம் ஞான், தாமர பூம்பைதலே”-ல் அடுத்தடுத்து ற, ர வின் பிரயோகம். முதல் நாள் ரிகர்சலில். நாக்கின் நுனியில் இருந்து ரத்தம் வந்து விட்டது. மன உறுதியோடு, அடுத்த நாள் சென்று சரியாக பாடினார். அந்த படத்தில் இன்னுமோர் க்ளாசிகல் இசை பாடல் “வீணே பாடுக பிரயதரமா”.
1961-இல் கே.ராகவன் இசையில் “உன்னியார்ச்சா” படத்தில் ஐந்து பாடல்களை பாடினார். அதில் “ஏ.எம்.ராஜாவுடன் பாடிய “அந்நு நின்னே கண்டதில் பின்னே” பாடல் மிகவும் பிரபலம். அவர் இசையில் “கிருஷ்ண குசேலா” படத்திலும் பாடினார்.
1962-ஆம் வருடம் , முன்னணி இசை அமைப்பாளர் ஜி.தேவராஜன் அவர்கள் இசையில் “பார்யா” (1962) என்ற படத்தில் பாடினார். அதில் வரும் “பெரியாறே, பெரியாறே பர்வத நிறையுடே பனிநீரே” என்ற பாடல் மிக பெரிய ஹிட். அப்படத்தில் நாலு பாடல்களை பாடினார். அதே வருடம் பாபுராஜ் இசையில் பாலாட்டுக்கோமன் என்ற படத்தில் நான்கு பாடல்களை பாடினார். அதில் ஏ.எம்.ராஜாவுடன் பாடிய “சந்தன பல்லக்கில்” பாடல் பெரிய ஹிட். அதே வருடம் Bro.லக்ஷ்மன் இசையில் “ஸ்ரீராம பட்டாபிஷேகம்” படத்திலும் (நான்கு பாடல்கள்), தட்சிணாமூர்த்தி இசையில் “விதி தந்ந விளக்கு” படத்திலும் பாடினார்.
அடுத்த வருடங்களுக்கு போவதற்கு முன்னால். மலையாள இசை உலகைப்பற்றி ஒரு சின்ன அலசல். மலையாள இசை உலகில் 60-களில் நான்கு இசை அமைப்பாளர்கள் முதன்மை நிலையில் இருந்தார்கள். ஜி.தேவராஜன் மாஸ்டர் மெல்லிசை, கர்நாடக இசை சார்ந்த பாடல்களில் கை தேர்ந்தவர். எம்.எஸ்.பாபுராஜ் ஹிந்துஸ்தானி இசையை கற்றவர். தட்சிணாமுர்த்தி கர்நாடக இசையில் பெரிய மேதை.. கே.ராகவன் மாஸ்டர் மலையாள மண்ணின் மணம் சார்ந்த பாடல்களை அருமையாக கையாளுவார். தவிர ஆர்,கே,சேகர் (A.R..ரகுமானின் தந்தை) , எம்.எஸ்.விஸ்வநாதன், M.B.ஸ்ரீனிவாசன் போன்றோரும் அவ்வப்போது இசை அமைத்து வந்தார்கள். கேரளாவில் மற்றெந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு எல்லா மத கலாச்சாரங்களும் பரவலாக இருந்தது. மலப்புறம் மாவட்டம் முஸ்லிம்களின் கலாச்சாரமும், கோட்டையம் கிறிஸ்துவர்களின் கலாச்சாரமும், பரவலாக ஹிந்துக்களின் கலாச்சாரமும் இருந்தன. எனவே எல்லா வகை படங்களும் எடுக்கப்பட்டன. இதனால், வீரர்களின் கதை சொல்லும் வடக்கன் பாட்டுகள், நாடோடிப்பாடல்கள் முஸ்லிம்களின் வாழ்க்கையை சொல்லும் மாப்பிள்ள பாட்டுகள், கடல், காயலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட வள்ளம், தோணி பாடல்கள், காட்டை மையமாக வைத்த பாடல்கள், விவசாயத்தை மையமாக வைத்து அமைக்கப்பட்ட பாடல்கள் கிறிஸ்துவ சமுதாயத்தை மையமாக வைத்த பாடல்கள் என பல வகையான பாடல்களும் படங்களும் வந்தன. தயாரிப்பு நிறுவனங்களை பொருத்த வரை Excel productions, Udhaya studios, Manjilas, neela productions, Thangam productions என பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் இருந்தன. இதில் உதயா தான் மிகப்பெரிய நிறுவனம். மலையாளத்தில் அதிக படங்களை தயாரித்தவர்கள். இன்றைய நடிகர் “குஞ்சாக்கோ போபனின்” தாத்தா தான் அதை நிறுவியவர்.
இனி அக்கால கட்டத்தில்(60-களின் துவக்கத்தில்) பி.சுசீலாவின் நிலை எப்படி இருந்தது என பார்ப்போம். தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளிலும் உச்சத்தில் இருந்தார் பி.சுசீலா. போதிய அளவு நேரம் ஒதுக்க முடியாத நிலை. என்றாலும் முடிந்த அளவு மலையாளத்திலும் பாடினார். இனி விட்ட இடத்தில் இருந்து ஆரம்பிக்கிறேன்.
1963-ஆம் வருடம் ஜி.தேவராஜன் இசையில் டாக்டர் (4 songs), கடலம்மா (5 songs), நித்ய கன்யகா( 4 songs) என வெற்றிப்படங்களில் பாடினார். டாக்டர் படத்தில் வரும் “கல்பனயாகும் யமுனாநதியுடே” பாடல் பெரிய ஹிட். அது தான் கே.ஜே.யேசுதாசின் முதல் டூயட். கடலம்மா படத்தில் வரும் “பாலாழி கடவில் நீராட்டினிறங்கிய” பாடலும் பெரிய ஹிட். அதைப்போல் நித்ய கன்யகாவில் வரும் “கண்ணு நீர் முத்துமாய்” பாடல் பெரிய ஹிட். தவிர தட்சிணாமுர்த்தி இசையில் சிலம்பொலி, சத்யபாமா, சுசீலா போன்ற படங்களிலும், Bro. லக்ஷ்மணன் இசையில் காட்டு மைனா, ஸ்நாபக யோஹன்னான் படங்களிலும், R.K.சேகர் இசையில் கொச்சு தும்பி படத்திலும், M.B.ஸ்ரீநிவாசன் இசையில் “காயலும் கரயும்” படத்திலும் பாடினார்..
1964-ல் ஜி,தேவராஜன் இசையில் களியோடம், மணவாட்டி, ஓமனகுட்டன், ஸ்கூல் மாஸ்டர், களஞ்சி கிட்டிய தங்கம், அன்னா போன்ற படங்களிலும். பாபுராஜ் இசையில் பார்கவி நிலையம், தங்க குடம் போன்ற படங்களிலும், ராகவன் இசையில் ஆத்யகிரணங்ஙள், ரெபேக்கா, M.B.ஸ்ரீனிவாசன் இசையில் ஆல்தரா, கலயும் காமினியும் படங்களிலும், bro. லக்ஷ்மணன் இசையில் ஆட்டம் பாம் என்ற படத்திலும், R.K.சேகர் இசையில் ஆயிஷா, பழஸிராஜா படங்களிலும் பாடினார். பாரதம் எந்நால், பதிவாயி பௌர்ணமி தோறும் (ஆத்ய கிரணங்ஙள்), கன்யாமறியமே (ஆல்தரா), முத்தாணே, அக்காணும் (ஆயிஷா), உருகி உருகி (அன்னா), அரபிக்கடலொரு (பார்கவி நிலையம்), கை நிறையே(களஞ்ஞ கிட்டிய தங்கம்) முத்தஸ்ஸி கத , பறக்கும் தளிகயில் (மணவாட்டி), ஆகாஷ கங்கயுடே, அஷ்டமி ரோஹிணி (ஓமனகுட்டன்), முத்தே வா வாவோ(பழஸ்ஸி ராஜா), கிளிவாதிலில் (ரெபேக்கா), தாமர குளகடவில், இனியென்றே (ஸ்கூல் மாஸ்டர்), யேஷு நாயகா (தங்க குடம்) போல பல ஹிட் பாடல்களை பாடினார்.
1964-இல் வந்த பார்கவி நிலையம் படம் பல மாற்றங்களை இசை உலகில் கொண்டு வந்தது. 1957-ல் மலையாளத்தில் அறிமுகமாகிய எஸ்.ஜானகி அவ்வப்போது ஒன்றிரண்டு பாடல்களை பாடி வந்தார். பார்கவி நிலையத்தில் அவர் நான்கு பாடல்களும், பி.சுசீலா ஒரு பாடலும் பாடினர். அது ஒரு பெரிய ஹிட் படம். பாடல்கள் சூப்பர் ஹிட். அதற்கப்புறம் அவர் மலையாளத்தில் வெற்றிப்படியில் ஏறத்துவங்கினார். ஏற்கனவே பி.லீலா முன்னணியில் இருந்தார். அதன் பிறகு பி.லீலா, பி.சுசீலா, எஸ்.ஜானகி என்கிற மூவரும் மலயாளத்தில் சமமாகவே பாடும் நிலை இருந்தது.
பாடல் ஆசிரியர்களை பொருத்தவரை வயலார் ராமவர்மா , பி.பாஸ்கரன் என இருவர் புகழ் பெற்றிருந்தார்கள். வயலார் நம்மூர் கண்ணதாசனை போல பெரும்புகழ் பெற்றவர். குணம் கூட கிட்டத்தட்ட அவரைப்போல் தான். அவர் எழுதிய பல பாடல்கள் அழியா புகழ் பெற்றவை. அதில் ஒன்று தேசிய விருது பெற்ற “மனுஷ்யன் மதங்களே ஷ்ருஷ்டிச்சு”. அவரும் ஜி.தேவராஜனும் சேர்ந்து பல அற்புதமான சாகாவரம் பெற்ற பாடல்களை உருவாக்கினார்கள். அந்த கூட்டணியில் யேசுதாசும், ப.சுசீலாவும் பெரும்பாலான பாடல்களை பாடினார்கள். இன்னொரு பக்கம் பி.பாஸ்கரன் காதல் பாடல்களை எழுதி பெயர் பெற்றார். அவரை நம் வாலியுடன் ஒப்பிடலாம்.எம்.எஸ்.பாபுராஜ்-பாஸ்கரன் இன்னொரு கூட்டணியாய் உருவாயிற்று. இந்த கூட்டணியில் யேசுதாசும், எஸ்.ஜானகியும் பெரும்பாலான பாடல்களை பாடினார்கள். இன்னொரு பக்கம் தட்சிணாமூர்த்தி அவர்கள் பி.லீலாவின் கர்நாடிக் இசை திறமையை உபயோகித்து நல்ல பாடல்களை கொடுத்தார். கே.ராகவனும் நிறைய ஹிட்ஸ் கொடுத்தார். இந்த காலம் மலையாள திரை இசையின் பொற்காலமாக மாறத்துவங்கியது.
1965-இல் தேவராஜன் இசையில் தாஹம், காட்டுப்பூக்கள். ஓடையில் நிந்நு, பட்டுத்தூவாலா, ஷகுந்தளா படங்களிலும், பாபுராஜ் இசையில் சுபைதா, காட்டு துளசி, சேட்டத்தி படங்களிலும், தட்சிணாமூர்த்தி இசையில் இணபிறாவுகள் படத்திலும் ஆலேபபி உஸ்மான் இசையில் கொச்சுமோன் படத்திலும், திவாகர் இசையில் ஜீவித யாத்ரா படத்திலும் பாடினார். ஷகுந்தளா படத்தில் வரும் “ப்ரியத்தமா ப்ரியத்தமா” பாடல் இன்றளவும் ஹிட். அதே படத்தில் படிய மாலினி நதியில், ஓடையில் நின்னு படத்தில் பாடிய “காற்றில் இளம் காற்றில்”, "முற்றத்து முல்லையில்", . பட்டுத்தூவாலா படத்தில் வரும் “ஆகாசப்பொய்கையில் உண்டொரு பொன்னின் தோணி”, காட்டு துளசியில் "கங்கையாரறு ஒழுகுந்ந நாட்டில் " தாஹம் படத்தில் "ஏகாந்த காமுகன்" எல்லாமே ஹிட்ஸ்.. .
1966-இல் தேவராஜன் இசையில் ஜெயில். காத்திருந்ந நிக்ஹாவ், கருணா, ரவுடி, திலோத்தமா, துலாபாரம் படங்களிலும், பாபுராஜ் இசையில் அனார்கலி, குப்பிவளா, பூச்சக்கண்ணி படங்களிலும், bro.லக்ஷ்மணன் இசையில் ப்ரியத்தமா படத்திலும், LPR வர்மா இசையில் “ஸ்தானார்த்தி சாராம்மா” படங்களிலும் பாடினார். துலாபாரம் படத்தில் “ஓமன திங்களில் ஓணம் பிறக்கும்போள்” பெரிய ஹிட். அனார்கலி படத்தில் ஏழு பாடல்கள் பாடினார். அதில் “ஏழு சிறகுள்ள தேரு” ஹிட் பாடல். குப்பிவளா படத்தில் வரும் “கண்மணி நீயென் கரம் பிடிச்சால்” பாடல் பெரிய ஹிட். கருணா படத்தில் வரும் “எந்தினி சிலங்ககள்” இன்னொரு ஹிட் என வரிசையாக ஹிட் பாடல்களாய் அமைந்தன.
1967-இல் பாபுராஜ் அவர்கள் பி.சுசீலாவுக்கேன்றே ஒரு படத்தின் பாடல்களை ட்டின் செய்தார். அந்த படம் அக்னிபுத்ரி (நான்கு பாடல்கள்). அதில் வரும் “கண்ணுதுறக்காத்த தெய்வங்ஙளே” பாடல் உணர்வுபூர்வமான பாடல். அருமையாக பாடி இருப்பார் பி.சுசீலா. தவிர பாபுராஜ் இசையில் கலக்டர் மாலதி, கனக சிலங்கா (4 பாடல்கள்) படங்களிலும், தேவராஜன் இசையில் அரகில்லம், அஸ்வமேதம். கரிநிழல், கசவுதட்டம், நாடன்பெண்ணு, பூஜா, சீலவதி படங்களிலும், தட்சிணாமூர்த்தி இசையில் “மைனாவதி கொலைகேஸ் படத்திலும் , ராகவன் இசையில் நகரமே நன்னி படத்திலும், சிதம்பர நாதன் இசையில் NGO, செகுத்தன்றே கோட்டா படங்களிலும், பருவூர் தேவராஜன் இசையில் அவள் படத்திலும் பாடினார். அஸ்வமேதம் படத்தில் வரும் “ஏழு சுந்தர ராத்ரிகள்”, “கறுத்தசக்ரவாள ” பாடல்கள் மிக பிரபலம். அதே போல் நாடன் பெண்ணு படத்தில் வரும் “ஆகாஷங்களில் இரிக்கும்” இனியத்தே மற்றும் “ஹிமவாஹினி” பாடல்கள் ஹிட் பாடல்கள்.
1968-இல் தேவராஜன் இசையில் அக்னி பரீக்ஷா, ஆனச்சந்தம், ஹோட்டல் ஹைரேஞ்ச், காட்டுகுரங்கு, காவாலம்சுண்டன்,புனர்ஜென்மம, ஸ்வப்னபூமி, தோக்குகள் கத பறயுந்நு, வெளுத்த கத்ரீனா, விப்ளவகாரிகள், யக்ஷி போன்ற படங்களிலும், பாபுராஜ் இசையில் அஞ்சு சுந்தரிகள், இன்ஸ்பெக்டர், கார்த்திகா, மிடுமிடுக்கி போன்ற படங்களிலும், தட்சிணாமுர்த்தி இசையில் அத்யாபிகா என்ற படத்திலும், ராகவன் இசையில் கொடுநல்லூர் அம்மா, புன்னப்ர வயலார் படங்களிலும், சுதர்சனம் இசையில் திரிச்சடி படத்திலும், ஸ்ரீனிவாசன் இசையில் "அபராதினி" படத்திலும், விஜயபாஸ்கர் இசையில் "காயல் கரையில்" படங்களிலும் பாடினார். அக்னி பரீக்ஷா படத்தில் திங்களும் கதிரோளியும், கைரளி கைரளி பாடல்களும், அத்யாபிகா படத்தில் வரும் “ஆதிர ராவிலே அம்பிளியோ பாடலும், அபராதினி படத்தில் வரும் “விவாஹமண்டபத்தில் ஆலொழியும்” பாடலும், ஹோட்டல் ஹைரேஞ்ச் படத்தில் வரும் “அஃஞாத ஃகாயகா” பாடலும், காட்டுகுரங்கு படத்தில் வரும் “அறியுந்நில்லா பவான் அறியுந்நில்லா”, “மாறோடணச்சு ஞான்” பாடல்களும், கார்த்திகா படத்தில் “இக்கரையாணேன்றே தாமஸம்” பாடலும், மிடுமிடுக்கி படத்தில் வரும் “கனகப்ரதீக்ஷ தன்” பாடலும், திரிச்சடி படத்தில் வரும் “இந்துலேகே”, “வெள்ளதாமர மொட்டுபோலே” பாடல்களும் ஹிட் பாடல்கள்.
மீண்டும் ஒரு சின்ன குறிப்பு.. தேவராஜன் மாஸ்டர் ஒரு டாஸ்க் மாஸ்டர். சரியாக நினைத்தது வரும் வரை பாடாமல் விட மாட்டார். அவர் சொன்னார், “நான் என்ன நினைக்கிறேனோ, அதை புரிந்து கொண்டு, உள்வாங்கி அதை சரியாக பாடியது பி.சுசீலா மட்டுமே”. பி.சுசீலாவிடம் மிக மரியாதை வைத்திருந்தார். ஆனால் பி.சுசீலாவால் எப்போதும் சென்று பாட முடிவதில்லை. தமிழிலும், தெலுங்கிலும் பெரிய நடிகர்கள் படங்கள், இசையமைப்பாளர்களின் படங்கள், பெரிய பேனர்கள் என எல்லாவற்றிலும் பி.சுசீலாவே பாட வேண்டும். நடிகைகளும் அவர்களுக்கு பி.சுசீலாவே பாட வேண்டும் என கேட்க ஆரம்பித்தார்கள். குறைந்த பட்சம் 2 வாரங்களாவது காத்திருக்க வேண்டிய நிலை. நிறைய முறை கால்ஷீட் கொடுத்தும் பாட முடியாத நிலை. இந்நிலையில். ஜி.தேவராஜன் வேறு பாடகிகளை பாட வைக்க முயற்சித்தார். எதிர்பார்த்த பலன் இல்லை. எனவே வேறொரு புது பாடகியை அறிமுகம் செய்தார். அவர் தான் மாதுரி. (அன்னை வேளாங்கண்ணி படத்தில் “வானமெனும் வீதியிலே” பாடல் பாடுபவர்). அவர் வந்த பின் அவர் ஜி.தேவராஜன் இசையில் நிறைய பாட ஆரம்பித்தார். எனினும் சில பாடல்களை பி.சுசீலா பாடினால் மட்டுமே நன்றாக அமையும் என தோன்றினால், காத்திருந்து பாட வைப்பார். ( மலையாள பட மொத்த ஷூட்டிங்கும் பத்து பதினைந்து நாட்களில் முடித்து விடுவர். ஒரு பாட்டிற்கு 2 வாரம் காத்திருப்பது அவர்களுக்கு கஷ்டம். ) இனி அடுத்த வருடத்து படங்களை பார்ப்போம்.
1969-இல் தேவராஜன் இசையில் ஆனச்சந்தம். அடிமகள், ஜ்வாலா, கூட்டுக்குடும்பம், குமாரசம்பவம், மூலதனம், நதி, படிச்ச கள்ளன், ஸுஸி, உறங்ஙத்த சுந்தரி, படங்களிலும், mr.கேரளா, பல்லாத்த பகையன், நர்ஸ், குருதிக்களம் என வேறு இசையமைப்பாளர்கள் இசையிலும் பாடினார். அடிமகள் படத்தில் “செத்தி மந்தாரம் துளசி”, ஆனச்சந்தம் படத்தில் “மிழிமீன் போலே”. ஜ்வாலா படத்தில் “வதூ வரன்மாரே”, கூட்டுக்குடும்பம் படத்தில் “பரசுராமன் மழுவெறிஞ்சு நேடியதல்லா”, மூலதனம் படத்தில் “புலரானாயப்போள்”, நதி படத்தில் “பஞ்சதந்த்ரம் கதயிலே”, தப்புக்கொட்டாம்புரம், , ஸுஸி படத்தில் “சிந்தூரமேகமே”, “மானத்தே மந்தாகினியில்”, உறங்காத்த சுந்தரியில் “சந்தன கல்லில் உரச்சாலே” , பாதிரா பக்ஷிகளே பாடல்கள் ஹிட் ஆனவை.
(தொடரும்......) PART-2 PART-3
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக