எஸ்.பி.பி அவர்கள் 1969-ஆம் வருடம் முதல்
தமிழில் பாடிக்கொண்டு இருக்கிறார். அப்போது
பி.சுசீலா புகழின் உச்சியில் இருந்தார். மத்திய அரசு பாடகிகளுக்காக முதலில் அறிவித்த தேசீய விருதை பெற்றது கூட அவ்வருடம் தான். அந்நேரத்தில் ஒரு அறிமுக பாடகரான
எஸ்.பி.பியுடன் பி.சுசீலா அவர்கள் “இயற்கை என்னும் இளையகன்னி” என்னும் பாடலை பாடி
இருந்தார். பாடல் ஹிட் ஆகி அவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.
( இயற்கை என்னும் இளையகன்னி )
அதே
வருடம் எம்,ஜி,ஆர் நடித்த சூப்பர் ஹிட் படமான அடிமைப்பெண் படத்தில் எஸ்.பி.பி – பி.சுசீலா
பாடிய "ஆயிரம் நிலவே வா" பாடலும் மிகப்பெரிய
ஹிட் ஆக அமைந்தது. அதை தொடர்ந்து எம்.ஜி.ஆர் நடித்த பல படங்களில் எஸ்.பி.பி
அவருக்கு பின்னணி பாடினார்.
அதை
தொடர்ந்து சிவகுமார் கதாநாயகனாக நடித்த “பால்குடம்” படத்தில் “மல்லிகைப்பூ வாங்கிவந்தேன் புன்னகையின் நினைவாக” என்ற பாடலையும்
பி.சுசீலாவுடன் இணைந்து பாடினார் எஸ்.பி.பி அவர்கள்.
எஸ்.பி.பியை தெலுங்கில் அறிமுக படுத்திய
எஸ்.பி.கோதண்டபாணி தமிழில் ஜெமினி – வாணிஸ்ரீ நடித்த குழந்தை உள்ளம் என்ற படத்திக்கும் இசை
அமைத்தார். அதில் “முத்து சிப்பிக்குள்ளே ஒரு பூவண்டு” என்ற பாடலை பி.சுசீலாவும்
எஸ்.பி.பியும் இணைந்து பாடினர்.
இப்படி அறிமுகமான
வருடத்திலேயே பி.சுசீலாவுடன் இணைந்து ஐந்து பாடல்களை பாடி இருந்தார் எஸ்.பி.பி
அவர்கள். அதற்கு பின் ஏறுமுகம் தான். எம்.எஸ்.வி அவர்கள் எஸ்.பி.பிக்கு நிறைய
வாய்ப்புகளை அளிக்க துவங்கினார்கள். டி.எம்.எஸ்ஸின் ஆதிக்கம் திரை உலகில்
ஆக்கிரமித்து இருந்தாலும் அவ்வப்போது முத்துராமன். ஜெய்ஷங்கர். ரவிச்சந்திரன்,
சிவகுமார், ஜெமினி என பல நடிகர்களுக்கும் எஸ்.பி.பி தொடர்ந்து பின்னணி பாடி வந்தார்.
1970-ஆம் வருடம் வெளிவந்த
சில இனிமையான பாடல்கள் கீழே ..
ஜெய்சங்கர் நடித்து சங்கர் கணேஷ் இசை அமைத்த மாணவன் படத்தில் “கல்யாண ராமனுக்கும் கண்ணான ஜானகிக்கும்” என்ற டூயட் பிரபலமானது.
வி.குமார் இசை அமைப்பில் வெளிவந்த நவக்கிரகம் படத்தில் இடம் பெற்ற “உன்னை தொட்ட காற்று வந்து என்னை தொட்டது”
பாடல் எல்லோர் மனதையும் கவர்ந்த பாடல்.
T.K.ராமமூர்த்தி இசையில் வெளிவந்த “காதல் ஜோதி” படத்தில் “காதல் ஜோதி அணையாதது” என்ற டூயட்டும் எழுபதுகளின் ரசிகர்களை கவர்ந்த பாடல்.
எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் ஜெமினி நடித்த மாலதி படத்தில் “கற்பனையோ கை வந்ததோ”, “சிட் சிட் எங்கே
போவோம்” என்ற பாடலையும் எஸ்.பி.பி – பி.சுசீலா இணைந்து பாடினர்.
இதை தவிர “மாய தீவு ரகசியம்” என்ற டப்பிங் படத்திலும் “நீல கண்ணொருசெம்மீனா”, “கன்னி மனமோ” என்ற இரு பாடல்களை எஸ்.பி.பி - பி.சுசீலா பாடினர்.
1971-ஆம் வருடம் SPB-பி.சுசீலா குரல்களில் வெளிவந்த பாடல்கள்..
அவளுக்கென்று ஒரு மனம்
படத்தில் எம்.எஸ்.வி இசையில் எஸ்.பி.பி-பி.சுசீலா இணைந்து பாடிய “மங்கையரில் மகராணி”
பாடல் இன்னொரு அழகான டூயட்.
( மங்கையரில் மகாராணி )
உத்தரரவின்றி உள்ளே வா படத்தில் இடம் பெற்ற “மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி” இப்போதும் எஸ்.பி.பி ரசிகர்களால் ரசிக்கப்படும் அருமையான பாடல். அதே
படத்தில் “உன்னைத்தொடுவது இனியது” என இன்னொரு டூயட்டும் இதே குரல்களில் இடம்
பெற்றது. இதை தவிர டி.எம்.எஸ், பி.சுசீலா, எஸ்.பி.பி, எல்.ஆர்.ஈஸ்வரி குரல்களில் “உத்தரவின்றி உள்ளே வா உன்னிடம் ஆசை கொண்டேன் வா” என்ற ஜாலியான் பாடலும் படத்தில் இடம் பெற்றது.
இவ்வருடமும் எம்.ஜி.ஆர் நடித்த நீரும் நெருப்பும் படத்தில் எஸ்.பி.பி
எம்.ஜி.ஆருக்கு பின்னணி பாடினர். எஸ்.பி.பி - பி.சுசீலா இணைந்து பாடிய “மாலை நேரதென்றல் என்ன பாடுதோ” என்ற பாடல் பிரபலம் ஆகியது.
குலமா குணமா படத்தில் TMS, SPB, பி.சுசீலா, எஸ்.ஜானகி
குரல்களில் இடம் பெற்ற “உலகில் இரண்டு கிளிகள்” பாடலும் குறிப்பிட படத்தக்க பாடல்.
மூன்று தெய்வங்கள் படத்தில் எம்.எஸ்.வி இசையில் இடம் பெற்ற “முள்ளில்லா ரோஜா” பாடலும் அடிக்கடி ஒளிபரப்பாகும் பாடல்.
அருணோதயம் படத்தில் கே.வி.எம் இசையில் இடம் பெற்ற “எங்கள் வீட்டு தங்க தேரில்” ஒரு ஹிந்தி பாடலின் தழுவல் என நினைக்கிறேன்.
இவை தவிர "நினைத்தால் நான் வானம் சென்று ( நான்கு சுவர்கள் ), “மாணிக்க பதுமைக்கு காணிக்கையாக என் ( நீதி தேவன் ), உள்ளங்கள் பலவிதம் எண்ணங்கள் ஆயிரம் ( திருமகள் ), ஜாம் ஜாம் என்று சந்தோஷமாக ( யானை வளர்த்த
வானம்பாடியின் மகன் ) போன்ற பாடல்கள் எஸ்.பி.பி-பி.சுசீலா குரல்களில் மக்கள் மனதை
கவர்ந்தன. கொஞ்சம் கவனித்து பார்த்தால்
பெரும்பாலான பாடல்கள் ஹிட் ஆகி இருப்பது புரியும்.
( தொடரும் )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக