பின்பற்றுபவர்கள்

சனி, 22 ஏப்ரல், 2017

பி.சுசீலாவும் சூலமங்கலம் சகோதரிகளும் ...



     ஒரு நேர்காணலில் பி.சுசீலா அவர்களிடம் எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அப்போது பி.சுசீலா அவர்கள் ஒரு அருமையான கருத்தை சொன்னார்கள்.  "எம்.எஸ்.அம்மா பாடிய “சுப்ரபாதம்” ஒரு ஸ்டாம்ப் மாதிரி.. அது அப்படி தான் இருக்கணும். மாற்ற முயற்சிக்க கூடாது" என்றார். அதே போல் சில பாடகர்கள் பாடிய சில பாடல்களுக்கு வேறு மாற்று முயற்சிக்கவே முடியாது என்பது போல் மக்கள் மனதில் அது ஆழமாய் பதிந்து விடும். அந்த மாதிரி சில பாடல்களை பாடியவர் தான் சூலமங்கலம்  சகோதரிகள். தமிழ் கடவுளாம் முருகனை பாடி புகழ் பெற்றவர் பலர் உண்டு.. உள்ளம் உருகுதையா ( TMS), “நீயல்லால் தெய்வம் இல்லை” ( சீர்காழி), மருதமலை மாமணியே ( மதுரை சோமு), சொல்ல சொல்ல இனிக்குதடா ( பி.சுசீலா), சிங்கார வேலனே தேவா ( எஸ்.ஜானகி). என பல உதாரணங்களை சொல்லலாம். ஆனால் இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போல் அமைந்த “கந்த சஷ்டி கவசம்” பாடலை பாடியவர்கள் சூலமங்கலம் சகோதரிகள் ஆவர். காலையில் எழுந்தால் ஏதாவது ஒரு கோயிலில் இருந்து "சக்தியை நோக்க சரவண பவனா" என கேட்காத நாள் இருக்காது. எல்லா முருகன்  கோயில்களிலும் தவறாமல் ஒலிக்கின்ற பாடல் இது என்றால் மிகை இல்லை. இப்பாடலும் அப்படி தான். இதற்கு மாற்று முயற்சிக்க கூடாது என்பது போல் ஒரு தனித்துவம் மிக்க பாடல்.


     சூலமங்கலமும் பி.சுசீலாவும் இணைந்து திரைப்படங்களில் பாடிய தொகுப்பு இது. பெரும்பாலும் இரு பெண் குரல்கள் இணைந்து பாடும் போது அந்த பாடலின் தேவைக்கேற்ப குரல்களை தேர்ந்தெடுப்பார்கள். பக்தி பாடல்கள் என வரும் போது சூலமங்கலம் சகோதரிகள் குரல்களுக்கும் ஒரு தனி இடம் இருந்தது. அதனால் திரையில் பல பாடல்களை பாடும் வாய்ப்புகளையும் பெற்றார்கள். முறையான கர்நாடக சங்கீதம் கற்றுக்கொண்ட இவர்களுக்கு பக்தி பாடல்களும், மெல்லிசையும் பாடும் வாய்ப்புகளும் கூட கிடைத்தது. இவர்கள் பி.சுசீலாவுடன் இணைந்தும் பல நல்ல பாடல்களை பாடி  இருக்கிறார்கள் என்பது இந்த தொகுப்பின் மூலம் விளங்கும். பி.சுசீலா அவர்கள் பின்னணி பாட ஆரம்பித்து 25 வருடங்கள் ஆனதை ஒட்டி ( வெள்ளி விழா ) அவருக்கு ஒரு விழா எடுக்கப்பட்டது. அதற்காக ஒரு சிறப்பு மலரை அன்றைய பொம்மை பத்திரிக்கை வெளியிட்டது. அதில் சூலமங்கலம் அவர்களும் பி.சுசீலாவை பாராட்டி பேசி இருந்தார். அந்த படம் கீழே..  


   கே.வி.எம் இசை அமைத்த கந்தன் கருணை படத்தில் இடம் பெற்ற எல்லா பாடல்களுமே சூப்பர் ஹிட்ஸ். அதில் இடம் பெற்ற  “திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்” என்ற பாடல் பி.சுசீலா மற்றும் சூலமங்கலம் ராஜலக்ஷ்மி குரல்களில் ஒலித்த காலத்தையும் வென்ற பக்தி பாடல்களில் ஓன்று. இப்பாடலை கேட்காத தமிழர்கள் இருப்பார்களா என்பது சந்தேகமே. முருகனை போற்றும் இப்பாடலை தொடர்ந்து பல படங்களில் இது போன்ற பாடல்கள் இடம் பிடித்தன. சூலமங்கலம் சகோதரிகள் குரல்களில் கூட “எழுதி எழுதி பழகி வந்தேன்” என பாடல்  வெளிவந்தது.

        எம்.எஸ்.வி இசையில் கௌரி கல்யாணம் படத்தில் இடம் பெற்ற “திருப்புகழை பாட பாட வாய் மணக்கும்” என்ற முருகன் பக்தி பாடலும் இதே குரல்களில் பிரபல ஆனது.

    அதே போல் T.K.ராமமூர்த்தி இசையில் வெளி வந்த “நீலகிரி எக்ஸ்ப்ரஸ்” படத்திலும் “திருத்தணி முருகா தென்னவர் தலைவா” என்று திருத்தணி முருகனை போற்றி பாடும் பாடல் பி.சுசீலா மற்றும் சூலமங்கலம் ராஜலக்ஷ்மி குரல்களில் பிரபலம் ஆனது.

   D.B.ராமச்சந்திரன் இசையில் வெளிவந்த கற்பூரம் படத்திலும் “வணங்கிடும் கைகளின் வடிவத்தை பார்த்தால்” என ஒரு முருகனை பாடும் பாடல் இடம் பெற்றது.

       குங்குமம் படத்தில் இடம் பெற்ற “குங்குமம் மதுரை மீனாட்சி குங்குமம்” என்ற பாடலும் குறிப்பிட தக்க பக்தி பாடல். அதே போல் சீதா படத்தில் இடம் பெற்ற “நலம் காக்கும் குல தெய்வமே” பாடலும் சிறந்த பக்தி பாடல்களில் ஓன்று.  





கே.வி.எம் இசையில் வெளிவந்த :திருமால் பெருமை” படத்தில் இடம் பெற்ற “கரை ஏறி மீன் விளையாடும் காவிரி நாடு”  என்ற நடனப்பாடலும் இவர்கள் குரலில் ஒலித்தது. அதே போல எஸ்.ராஜேஸ்வர ராவ் இசையில் வெளிவந்த “பக்த பிரஹலாதா” படத்தில் இடம் பெற்ற “இந்திர லோகம் உன் சொந்தம்” என்ற நடனப்பாடல் “பி.சுசீலா, சூலமங்கலம். எஸ்.ஜானகி” ஆகியோர் குரல்களில் ஒலித்த பாடல். இதே பாடல் தெலுங்கிலும் இதே குரல்களில் Andani Sura seema Needenoyiஎன ஒலித்தது. கன்னடத்தில் கூட இதே குரல்களில் இப்பாடல் ஒலித்தது.



   குடும்ப உறவுகளுக்குள் பெண்கள் பாடுவது காட்சி அமைப்புகளுடன் சில படங்கல் வெளிவந்தன. எம்.எஸ்.வி இசை அமைத்த “மோட்டார் சுந்தரம்பிள்ளை” படத்தில் இடம் பெற்ற “துள்ளி துள்ளிவிளையாட துடிக்குது மனசு” என சகோதரிகள் ஒன்றாக விளையாடி களிக்கும் பாடல் ஓன்று “பி.சுசீலா, சூலமங்கலம்  மற்றும் எல்.ஆர்.ஈஸ்வரி குரல்களில் ஒலித்தது.

      குடும்பத்தின் மருமகள்கள் ஒன்றாய்  பாடுவது போல அமைந்த அருமையான பாடல்களில் ஓன்று இது. எம்.எஸ்.வி இசை அமைத்த  “பாமா விஜயம்” படத்தில் பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி மற்றும் சூலமங்கலம் ராஜலக்ஷ்மி ஆகியோர் பாடிய  “ஆணி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே” என்ற பாடல் ஆகும்.  இப்பாடல்  இப்போதும் கூட அடிக்கடி போட்டிகளில் பாடப்படும் பாடல்களில் ஓன்று.. இதே குரல்களில் “எல்லாம் உனக்காக” படத்திலும் ஒலித்த  “மனசு போல் மாப்பிள்ளையை” என்ற பாடல் குறிப்பிட படத்தக்கது..

பக்தி படங்களில் வெற்றி பெற்ற இந்த ஜோடிக்குரல்கள் ஒரு தாலாட்டிலும் தங்களை நிரூபித்தது. “குலமா குணமா” படத்தில் இடம் பெற்ற “பிள்ளைக்கலி தீர உன் அன்னை வந்து சேர்ந்தாள்” என்ற தாலாட்டு கவனிக்க தக்க பாடல்.

    அதே போல ஒரு சோகப்பாடலும் இக்குரல்களில் மனதை கவர்ந்தது. கே.வி.எம் இசையில் எம்.ஜி.ஆர் நடித்த “மாடப்புறா” படத்தில் இடம் பெற்ற “மனதில் கொண்ட ஆசைகளை மறந்து போய் விடு” பாடலும் குறிப்பிட படத்தக்க பாடல்களில் ஓன்று.

மஹாகவி காளிதாஸ் என்ற படத்தில் இடம் பெற்ற “கலைமகள் எனக்கொரு ஆணையிட்டாள்” என்ற பாடலை TMS, பி.சுசீலா, பொன்னுசாமி மற்றும் சூலமங்கலம் இணைந்து பாடினர். பாடலுக்காக மட்டும் அல்ல காட்சி அமைப்புக்காகவும் பார்க்க வேண்டிய பாடல் காட்சி இது.

இவை தவிர வியட்நாம் வீடு” படத்தில் இடம் பெற்ற “என்றும் புதிதாக இளமை குறையாமல் தென்றல் போல்” என அறுபதாம் கல்யாண விழா பாடல் ஓன்று இடம் பெற்றது..

     ஜி.ராமநாதன் இசை அமைத்த அரசிளங்குமரி படத்தில் இடம் பெற்ற “ஊர்வலமாக மாப்பிள்ளை  பெண்ணும் சேர்ந்து வருகிறார்” என்ற கிராமிய மணம் கமழும் பாடலும் கேட்க இனிமையாக இருக்கும்.

             கவனித்து கேட்டால் எல்லாமே அருமையான பாடல்கள் தான். இதை தொகுக்கும் போது ரெண்டு மூன்று ஹிட்ஸ் இருக்கும் என நினைத்தேன். தொகுத்து முடித்த போது எனக்கே ஆச்சரியமாக இருந்தது.

   இவை தவிர சில படங்களுக்கும் சூலமங்கலம் சகோதரிகள் இசை அமைத்தனர். அவர்கள் இசை அமைத்த “தரிசனம்” படத்தில் இடம் பெற்ற “கல்யாணமாம் கல்யாணம் அறுபதாம் கல்யாணம்” என்ற பாடலை TMS; ப.சுசீலா இணைந்து பாடினர். தரிசனம் படத்தில் இடம் பெற்ற “என்றும் புதிதாக பாடலும்” அறுபதாம் கல்யாண நிகழ்வை கொண்டாடும் பாடலே.



அதே போல், சூலமங்கலம் சகோதரிகள் இசையில் வெளிவந்த “பிள்ளையார்” என்ற  படத்தில் ஜேசுதாஸ், பி.சுசீலா பாடிய “மரகத தோரணம் வாசலில் அசைந்திட” என்ற பாடலும் தவறாமல் கேட்க வேண்டிய பாடல்களில் ஓன்று. 

List of Songs..

YearLangMovieSongsMusic
1961TamilarasilankumarioorvalamagaG. Ramanathan
1961Tamilellaam unakkaagamanasu pol maapillayaiK.V. Mahadevan
1962Tamilmaadappuramanadhil konda aasaigalaiK.V. Mahadevan
1963Tamilkungumamkungumam mangala mangayar[1]K.V. Mahadevan
1963Tamilkungumamkungumam mangala -ver2K.V. Mahadevan
1966Tamilgowri kalyanamthirupugahzhai paada paadaM.S. Viswanathan
1966Tamilmahakavi kaalidaskalaimagal enakkoruK.V. Mahadevan
1966Tamilmotor sundarampillaiThulli thulli vilayada thudikkuthuM.S. Viswanathan
1967Telugubhaktha prahaladhajayaho(andani suraseema)S. Rajeshwara Rao
1967Tamilbhaktha prahaladhaindira logam un sonthamS. Rajeshwara Rao
1967Tamilkandhan karunaiThiruparankuntrathilK.V. Mahadevan
1967TamilkarpooramVanagidum kaigaLin vadivathaiD.B. Ramachandran
1967Tamilseethanalam kaakkum kulaK.V. Mahadevan
1968Tamilbhama vijayamaanimuthu vaangi vanthenM.S. Viswanathan
1968Tamilneelagiri expressthiruthani muruga thennavarT.K. Ramamurthy
1968Tamilthirumal perumaikaraiyeri mEn vilayadumK.V. Mahadevan
1970Tamilvietnam Veeduendrum puthithaagaK.V. Mahadevan
1971Tamilkulama gunamapillaik kali theera un annai K.V. Mahadevan
1969TamilDarisanamKalyanamam kalyanamSoolamangalam
1985TamilPillaiyarMaragatha thoranamSoolamangalam


Thanks.. 


2 கருத்துகள்: